2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திண்டிவனம் மற்றும் விழுபுரம் நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான்.அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை" என கண்டித்தார். இதையடுத்து, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது மற்றும் போராட்டம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.