தமிழ்நாடு

”நீட் தேர்வு எழுதும் மாணவர்களை திட்டமிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசு” : இரா.முத்தரசன் கடும் கண்டனம்!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களை ஒன்றிய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

”நீட் தேர்வு எழுதும் மாணவர்களை திட்டமிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசு” : இரா.முத்தரசன் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதுநிலை ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களை அலைக்கழிக்காதீர். சொந்த மாவட்டங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நீட் தேர்வுகளுக்கு ஆயத்தமாவது மட்டுமின்றி, தேர்வு மையங்களுக்குச் செல்வது, உள்ளே நுழைவது என அனைத்திலும் தேவையற்ற தடைகள் ஏற்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே கடந்த ஜூன் 23 ஆம் நாளில், தேர்வு எழுத ஆயத்தமாக மையத்துக்கு மாணவர்கள் வந்த பின்னும், தேர்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது, ஆகஸ்ட் 11ஆம் தேதி காலையும், மாலையும் தேர்வு வைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்த தேர்வு மையங்களை விட்டு விட்டு, வேற்று மாநிலங்களில், ஐநூறு கிலோ மீட்டர், ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் செல்ல வேண்டி இருக்கிறது. மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கும் இதே நிலைதான். சுமார் இரண்டு லட்சம் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத இருக்கிறார்கள்

குறைந்த கால அவகாசத்தில், வழக்கமான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த முடியாமல், பெரும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்வர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெரும் பொருட்செலவு, மனச்சோர்வு ஆகியவற்றால் தேர்வர்கள் அவதியுறுகிறார்கள். நல்ல மனநலம் கொண்டவர்களால், தேர்வர்களை பொருளில்லாமல் அலைக்கழிக்கும் வகையில் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியாது.

பெரும் பண வசதி இருந்தால் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுத முடியும் என்று ஒவ்வொரு அசைவிலும் தேர்வாணையம் நிரூபித்து வருகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள் விருப்பம் தெரிவித்த மையங்களிலோ, அல்லது அவர்கள் வாழும் மாவட்டங்கள் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களிலோ அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories