சென்னை கொடுங்கையூரில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கு இருக்கக்கூடிய கோயிலில் வழிபாடு செய்து நடை பயணத்தை மேற்கொண்ட செல்வப்பெருந்தகை பொதுமக்களிடம் காங்கிரஸ் கொள்கை மற்றும் பாஜக எதிர்ப்பு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை ஒவ்வொரு இல்லம் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். பாஜகவின் பாசிச முகத்தை அனைவருக்கும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த நடைபயணத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் இந்தியா கூட்டணிக்கு எவ்வளவு வலு சேர்த்ததோ, அதேபோல தமிழகத்திலும் இந்தியா கூட்டணிக்கு இந்த நடைபயணம் வாலு சேர்க்கும். இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அடுத்து வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் இந்தியா கூட்டணிக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபணம் ஆகி உள்ளது" என தெரிவித்தார்.