தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தி வருமாறு:-
உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ஆம் நாள் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். இது அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கக் கூடியதாகும். நல்ல குடிமக்களாக உருவாக வேண்டிய குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே தொழிலாளர்களாக மாறுவதால் ஒரு நாடு தனது சமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், அமைதி, சமூகத்தின் சமச்சீர் தன்மை மற்றும் ஆற்றல் மிக்க மனித வளத்தையும் இழக்க நேரிடுகிறது.
கல்விச் செல்வம் பெற வேண்டிய சமயத்தில், கடுமையான வேலைச் சுமைகளைச் சுமந்து நிற்கின்ற பிஞ்சு குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறை என்ற கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் அளித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே தமிழ்நாடு அரசின் அடிப்படை நோக்கமாகும்.
பெற்றோர்களுக்கு போதிய வருமானம் இல்லாமையினாலும் மற்றும் குடும்ப சூழ்நிலைகளினாலும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு,
அவர்களுக்கு தரமான கல்வி அளித்திடவும், பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடவும், அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கட்டணமில்லாக் கல்வி, விலையில்லாப் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, சீருடைகள், சத்தான காலை மற்றும் மதிய உணவு, காலணிகள், இலவச பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கண்டறியப்படும் சூழலில், அக்குழந்தைகளை உடனடியாக மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்த்து கல்வி அளித்து குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது தொடர்பான சட்டம் மற்றும் விதிமுறைகள் சீரிய முறையில் அமலாக்கம் செய்யப்படுகின்றன. சட்ட அமலாக்கம், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான மாநில செயல் திட்டம் (State Action Plan), நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) ஆகியவற்றினையும் தீவிரமாக செயல்படுத்தி, தமிழ்நாட்டினை 2025-ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக மாற்றிட தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கூட்டு முயற்சிகளால் மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது, பொது மக்களும் வேலை அளிப்போரும் இப்பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்களும் அரசு அலுவலர்களும் தங்களது மாவட்டங்களை குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசின் இந்த சீரிய முயற்சிகளால் தமிழகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ஆம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி .
எனவே, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என அனைத்து பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி பூண்டு, நம் நாட்டை வளமிக்கதொன்றாக மாற்றுவோம் என அனைவரும் சூளுரைப்போம். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றிடுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.