உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இஸ்லாமியர் பண்டிகையான ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்த பண்டிகையின் தினம் மாறும். இந்த பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைபிடிப்பர். உலகில் ஒவ்வொரு இடங்களில் இந்த பண்டிகை வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. வானில் தோன்றும் பிறையின் அடிப்படியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (11.04.2024) கொண்டாடப்படுவதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இந்த ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கை வருமாறு :
"நன்மை தீமைகளைப் பிரித்தறிந்து, நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம், மாற்றம் தருகின்ற மாதம்; உள்ளங்களில் உண்மை ஒளி படர்ந்திடும் மாதம் ஆகும். இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்.
காய்ந்த குடல்கள், காலியான வயிறுகள், பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் திளைக்கின்றனர்.
வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் அடித்தளம்தான் மதச்சார்பின்மையாகும். நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளை விட்டி அடிப்போம்.
அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத் துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை இசுலாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்."