ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சியை கடந்த ஜனவரி 3-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கினார்.
இந்த புத்தகக் காட்சி வரும் 21 ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி நாளான இன்று இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. புத்தக வாசிப்பாளார்களுக்காக விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெற்றது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடியோடு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே கடந்த 8-ம் தேதி சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக அன்று ஒரு நாள் நடைபெறாது என்று அறிவிப்பு வெளியான நிலையில், மொத்தம் 18 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டு 600 பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றன. மேலும் பார்வையற்றவர்களுக்கு சிறப்பாக அரங்கு அமைக்கப்பட்டு, இலவச கழிப்பறை, குடிநீர் மற்றும் இண்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டன..
இந்த புத்தக காட்சிக்கு நேற்று (ஜன. 20) வரை சுமார் 9 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளதாகவும், சுமார் ரூ.10 கோடி வரை புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தேர்வுக்கான புத்தகம், ஆன்மீகம், குழந்தைகளுக்கான வரைபட புத்தகங்கள், கதைகள் போன்றவை வழக்கம் போல எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
இன்றைய தினம் இறுதி நாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் புத்தகம் வாங்க வருகை தந்தனர். எதிர்கால இந்தியாவுக்கு சிறந்த விடிவெள்ளி புத்தகம் தான் என்று பொதுமக்கள் கூறி வரும் நிலையில், குழந்தைகள் அதிகளவில் வருகை தருவதால் அடுத்தடுத்த ஆண்டுகள் அவர்களாகவே புத்தக கண்காட்சிக்கு வருவதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
தொடர்ந்து புத்தகக் காட்சியின் நிறைவு நாள் நிகழ்வில், புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து உதவி புரிந்த கொடையாளர்கள், நிறுவனங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பாராட்டி கௌரவித்தார். மேலும் பதிப்புத் துறையில் நூற்றாண்டு, பொன்விழா, வெள்ளிவிழா கண்ட பதிப்பாளர்களையும் பாராட்டி சிறப்பு செய்தார்.