தமிழ்நாடு

“ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது...” - பூவுலகு சுந்தரராஜன் கடும் விமர்சனம்!

ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

“ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது...” - பூவுலகு சுந்தரராஜன் கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெருமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளது. இதனிடையே ஒன்றிய அரசிடம் பேரிடருக்கான நிவாரண நிதி வேண்டும் என்றும், சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் தற்போது வரை நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு, இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் இருக்கிறது. மேலும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் வரலாறு காணாத மழையை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறியதோடு, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தது குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர், சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்றும், அதைவிட இது பெரிய பேரிடர் இல்லை என்றும் கூறினார். நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது...” - பூவுலகு சுந்தரராஜன் கடும் விமர்சனம்!

அந்த வகையில் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு : "ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேச்சு வழக்கு என்பது அகங்காரமான முறையில் இருந்தது. சுனாமியயை கூட தேசிய பேரிடராக நாங்கள் அறிவிக்கவில்லை என கூறியிருந்தார். ஆனால், சுனாமி வந்து ஒரு வருடம் கழித்துதான் அதாவது 2005ல் தான் தேசிய பேரிடர் ஆணைய சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்ற நிர்மலா சீதாராமன் கூறும் பம்மாத்து எல்லாம் இங்கு செல்லாது. மாநில பேரிடருக்கு கொடுக்க வேண்டிய நிதியை தான் கொடுத்துள்ளார்களே தவிர, சிறப்பு நிதியாக ஏதும் தரவில்லை. குஜராத் போன்ற மாநிலங்களில் இம்மாதிரியான சூழ்நிலைக்கு முன்பணமாகவே 1000 கோடி ரூபாய் கொடுக்கின்றனர்.

“ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது...” - பூவுலகு சுந்தரராஜன் கடும் விமர்சனம்!

ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா என 5 மாநில வரிப்பகிர்வை சேர்த்து வரும் தொகையை விட உத்திரப்பிரதேசத்திற்கு அதிக வரித்தொகையை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒன்றிய அரசு பாரபட்ச முகத்தை காட்டுகிறது என்பதை உணர முடிகிறது. மக்களின் வரிப்பணத்தில் தேவையற்ற செலவுகளை செய்யும் அதை விட்டுவிட்டு காலநிலை மாதிரிகளை உருவாக்கியிருக்கலாம்.

இந்தியாவில் மிக அதிகமாக வரி கொடுக்கும் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு அதிகமாக வரி எதிர்பார்ப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களை இரண்டாம் தாரமாக பார்ப்பது ஏற்று கொள்ள முடியாதது. பாஜக ஆட்சி எப்போதும் தமிழர்களுக்கு எதிரான ஆட்சியை தான் அரங்கேற்றுகிறது.

மிக்ஜாம் புயல் பேரிடரை விட பெரிய பேரிடர் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசின் அணுகுமுறை. கோவில் கட்டுவது போன்ற செயல்களை விட்டுவிட்டு ஒன்றிய அரசு காலநிலை மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் பேரிடர் கால பேரழிவை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். ஜி எஸ் டி என்ற கட்டமைப்புக்குள் உள்ளதால் ஒன்றிய அரசை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. தேவையற்ற வஞ்சகத்தை ஒன்றிய அரசு வெளிப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை கொடுக்க வேண்டும்." என்றார்.

இதுகுறித்து சுந்தரராஜன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சட்டம், சுனாமி வந்து ஒரு வருடம் கழித்துதான் இயற்றப்பட்டது. அப்போதுதான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை என்கிற வார்த்தையை கற்றுக் கொடுத்ததே சுனாமிதான். அதனால் சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்கிற பம்மாத்து எல்லாம் வேண்டாம்.

தமிழ்நாடு கேட்பது இதுதான், “வழக்கமாக SDRF-க்கு கொடுக்கவேண்டிய நிதி இல்லாமல், நாங்கள் பேரிடருக்கும் கேட்கும் தொகையை அல்லது அதில் ஒரு பாதியாவது கொடுங்கள்” என்பதுதான். இதை ஒன்றும் யாசகமாக கேட்கவில்லை, இந்திய ஒன்றியத்திற்கு மிக அதிகமாக வரியை கொடுக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்கிற உரிமையில்தான் கேட்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories