தமிழ்நாடு

அதிமுக அரசு பேரிடர்களை கையாண்ட லட்சணம் இதுதான்: பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

புயலுக்கு பின்னர் எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு பேரிடர்களை  கையாண்ட லட்சணம் இதுதான்: பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புயலுக்கு பின்னர் எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விவரம் பின்வருமாறு:-

புயல் மற்றும் பெருமழைக்கு பிறகு சென்னை மாநகரம் தற்பொழுது மீண்டு எழுந்து வந்துள்ளது. முதல்வரின் நேரடி ஆய்வின் மூலமும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. புயலுக்கு பின்னர் எடுத்த நடவடிக்கை காரணமாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். நான்கு மாவட்ட மக்களுக்காக முதல்வர் அறிவித்த நிவாரண தொகையின் காரணமாகவும் மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் தாங்கி கொள்ள முடியாத சில எதிர்கட்சிகள் அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். திமுக அரசு 2021-ல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது, தமிழ்நாடு கொரோனா பேரிடரில் சிக்கியிருந்தது. அந்த சமயத்தில் மிகச்சிறப்பாக அந்த காலத்தை திமுக கையாண்டது. அந்த காலத்தில் வடமாநிலங்களில்கூட கங்கையில் பிணங்கள் மிதந்தன, பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் அவதிக்கு உள்ளாகினர். ஆனால் தமிழகத்தில் முதல்வரின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பேரிடர் நடவடிக்கையை திமுக அரசு சிறப்பாக நடத்திகாட்டியது. தனி குழு அமைத்து , உயிர் காக்கும் மருந்துகளை உடனடியாக மக்களுக்கு சென்றடைய வைத்தது என அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது மட்டும் அல்லாமல், பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள்ளே முதல்வரே சென்று, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் சொல்லும் முதல்வராகத்தான் தமிழ்நாட்டு முதல்வர் திகழ்ந்தார்.

ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது திமுக அரசு. அந்த வகையில்தான் தற்போது ஏற்பட்ட பேரிடரையும் முன்னின்று எதிர்கொண்டது. முதல்வர் முன்னின்று, பேரிடரை எதிர்கொண்டார். திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள், ஏன் தவறவிட்டோம் என்று தான் யோசிக்க வைக்கும் அரசாக இந்த அரசு விளங்கும் என முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த மழையின் போதும் எந்த அரசியலையும் பார்க்காமல் அனைத்து மக்களுக்காவும் ஒட்டுமொத்த திமுக அரசும் களம் இறங்கி இந்த பேரிடரை சமாளித்திருக்கிறது.

அதிமுக அரசு பேரிடர்களை  கையாண்ட லட்சணம் இதுதான்: பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

2015-ஆம் ஆண்டில் வந்த வெள்ளத்தின் போது, அப்போதைய அரசு எப்படி எதிர்கொண்டது என்பதையும் , இந்த பெருமழையின் போது அரசின் முன்னெச்சரிக்கை காரணமாக திமுக அரசு எப்படி கையாண்டுள்ளதை என்பதையும் “தி இந்து” ஆங்கில பத்திரிகை தெளிவாக கட்டுரை எழுதியுள்ளார்கள். வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றத்தை முறையாக தமிழக அரசு கையாண்டது என்றும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. நிவாரண உதவிகளில்கூட , அதிமுக ஆட்சியில் இருந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டாமல் , முறையாக யாருக்கெல்லாம் நிவாரணம் கிடைக்க வேண்டுமோ அனைவருக்கும் கொடுத்துள்ளோம். 2015 பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். சென்னைக்கு உதவ அமெரிக்கா போன்ற நாடுகள்தான் வர வேண்டி இருந்தது. அப்போது நிவாரண உதவிகளின்போது எந்த ஒருங்கிணைப்பும் இல்லை என்று உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டியது.

ஆனால் தற்போது மண்டல வாரியாக ஆட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், கால்வாய்கள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட்டு , முன்னதாகவே அரசு பொதுவிடுமுறையை அறிவித்தது.

2015-ஆம் ஆண்டின் போது, 10,250 கோடி ரூபாய் நிவாரண தொகையாக வேண்டும் என ஜெயலலிதா ஒன்றிய அரசிடம் கேட்டார். ஆனால் தற்போது 5,060 கோடி ரூபாய்தான் கேட்டுள்ளோம். ஆனால் அப்போதும் 5,000 ரூபாய்தான் நிவாரணமாக கொடுத்தார்கள். ஆனால் திமுக அரசோ 6,000 ரூபாய் கொடுக்கிறோம். இந்த நிவாரண தொகையையும் மத்திய அரசின் நிதியில்தான் கொடுப்பதாக கூறியிருக்கிறார் பாஜக வின் மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளம் வந்த போது, கமலாலயத்தின் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தவர்கள்தான் இவர்கள். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிகூட , முழங்கால் அளவு தண்ணீரில் இருந்து கொண்டு பேட்டி கொடுத்துவிட்டு, சேலம் சென்று இன்று மீண்டும் சென்னை வந்து நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறுகிறார்.

முதலில் ஒன்றிய அரசிடம் பேசி, தமிழக அரசு கேட்கும் நிதியை அண்ணாமலை பெற்றுத்தர வேண்டும். ஜி.ஸ்.டி. நிலுவை தொகை உட்பட , பல மாநிலங்களை ஒப்பீட்டளவில் பார்த்தால், தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. நாம் 1 ரூபாய் கொடுத்தால் , நமக்கு திரும்ப வருவது வெறும் 29 பைசா தான். 2014 -15 முதல் 2021 – 22 வரை நாம் ஒன்றிய அரசிற்கு கொடுத்தது 5.16 லட்சம் கோடி. நமக்கு திரும்ப கிடைத்திருப்பது 2.08 லட்சம் கோடி மட்டும் தான். இதை பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நிலைமை வேறு விதமாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

2015-ஆம் ஆண்டு மழை பாதிப்பின் போது அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289 பேர். 23 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பிறகுதான் மின்சாரம், தொலைத்தொடர்புகள் கொடுக்கப் பட்டன. ஆனால் இன்றைய சூழலில் அந்த நிலைமைகள் எதுவும் இல்லாத வகையில் திமுக அரசு செயல்பட்டது.

புயலின் மேகக்கூட்டங்கள் காரணமாக தொடர்ச்சியாக 44 மணி நேரம் இடைவிடா மழை என்பது பெய்தது. சென்னை மட்டும் அல்லாது, புறநகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் பெருமழை பெய்தது. திமுக அரசு செய்த மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக புறநகரில் தாழ்வான பகுதிகளில் மட்டுமே நீர் தேங்கியது. 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையாக கொடுக்க வேண்டும் என கூறும் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தின் போது வெறும் 1000 ரூபாய்தான் கொடுத்தார். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் , கஜானா காலியாக இருந்த போதும் 4000 ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்தோம்.

2011 டிசம்பரில்தானே புயலின் போது அதிமுக வினர் பொதுக்குழுவை கூட்டிக்கொண்டு இருந்தார்கள். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 2015-ஆம் ஆண்டில் சென்னையை மூழ்கடித்தார்கள். 2017-ஆம் ஆண்டின் போது ஓகி புயல் பாதிப்பின் போதுகூட சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ, அதிகாரிகளோ செல்லவில்லை. இப்படித்தான் அதிமுக அரசு பேரிடரை கையாண்டது.

முதல்வர் அனைத்து இடங்களுக்கும் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததுடன், புயலுக்கு பிறகும் பாதிப்பிற்கு உள்ளாகிய இடங்களுக்கும் முதல்வர் நேரடியாக சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். வானிலை அறிக்கையை முன்னெச்சரிக்கையாக எடுத்து நடவடிக்கை எடுத்த காரணத்தால் பெரும் அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தனை பணிகளை செய்த பிறகும் அரசியல் உள்நோக்கத்திற்காக தான் எதிர்கட்சியினர் திமுக அரசின் மீது குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

கொசஸ்தலை ஆற்றில் உள்ள கழிவுகளை முழுமையாக அகற்றும் பணியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு துறைகளின் சார்பாக முதற்கட்டமாக பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு

5,060 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். ஒற்றை இலக்கத்தில்தான் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகை கொடுக்க 16ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், எந்த வட்டங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் எடுத்துள்ளோம். தற்போதைய நிலையில், ரேசன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்க இருக்கிறோம்.

அதிமுக அரசு பேரிடர்களை  கையாண்ட லட்சணம் இதுதான்: பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

அரசு அனைத்தையும் உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தால்தான் பெரும் சேதாரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இரண்டு நாள் தொடர் மழையாக இருந்தது. மழை நின்ற அடுத்த நிமிடமே நிவாரண பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டன. மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற அனைத்தையும் அமைச்சர் கே.என்.நேரு தெளிவாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் எதையும் மூடி மறைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை.

மழையின் போது சிறு குறு தொழில்நிறுவனங்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்தும் அவர்களுக்கான சலுகைகள் தொடர்பாகவும் முதல்வர் ஏற்கனவே ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் ஒன்றிய அமைச்சருடன் பேசி வருகிறார். மின்கட்டணம் செலுத்துவதில் கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை முறையாக அதன் பணிகளை செய்த காரணத்தால்தான் , கடந்த 2015 போல செம்பரம்பாக்கத்தில் மனித தவறினால் ஒரு பேரிடர் ஏற்பட்டதை போல, இந்த முறை ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. முகத்துவாரத்தில் முறையான தூர்வாரும் பணிகளையும் நீர்வளத்துறை செய்துள்ளது.

நிவாரண தொகையை வங்கியில் போட்டால், மினிமம் பேலன்ஸ் போன்ற பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக தொகை பிடித்தம் செய்யப்பட்டது. அதனால் தற்போது வங்கியில் போடுவதை விட, கையில் சேருவதுதான் சரியாக இருக்கும்.

இதுபோன்ற பேரிடர்கள் வரும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அரசு எடுக்கிறது. இந்த பேரிடர் சில பாடங்களை கற்றுத்தந்துள்ளது. அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

banner

Related Stories

Related Stories