குழந்தைகள் தின விழாவையொட்டி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவிகளின் மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய ஒன்றியத்துக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித்துறையில் எடுக்கபட்டுள்ளது. கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் உடற்பயிற்சி வகுப்புகளை கடன் வாங்காதீர்கள், முடிந்தால் உங்கள் வகுப்புகளுக்கும் மாணவர்களை விளையாட வைக்க முயற்சி செய்யுங்கள் என அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் ஒவ்வொரு முறை மாணவர்களை சந்திக்கும் போதும் தெரிவிப்பது ஒன்று தான், படிப்பு தான் உங்களிடம் இருந்து பறிக்க முடியாத ஒரே சொத்து. உங்களை தாயாக தந்தையாக காக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றார்.
மேலும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கல்வி குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.