ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரய்யா. போலிஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மாதவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து தனது இரண்டு மகன்களுடன் மாதவி தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையில் மனைவி பெயரில் சிவசங்கரய்யா 4 சென்ட் நிலம் வாங்கி இருந்தார்.
இதையடுத்து மனைவி பிரிந்து சென்றதால், தான் வாங்கி கொடுத்த நிலம் மட்டும் எப்படி அவருக்குச் சொந்தமாக இருக்கமுடியும் என நினைத்து அவரை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு அவர் நிலத்திற்கு இரண்டு மகன்கள் வாரிசாக இருப்பதால் நிலத்தைக் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் குறுக்கு வழியில் நிலத்தை அடைய சிவசங்கரய்யா திட்டம்போட்டுள்ளார். இதன்படி 2019ம் ஆண்டு தனது மனைவி சிகிச்சையிலிருந்தபோது இறந்து விட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளார். இதைக்கொண்டு மனைவி பெயரிலிருந்த ஆவணத்தைத் தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
பிறகு நிலத்தை விற்க முயற்சி செய்தபோதுதான் இந்த உண்மை மாதவிக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியிடமே மோசடி செய்த போலிஸ் காண்ஸ்டபிளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.