தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.10.2023) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழாவில் ஆற்றிய உரை:-
இந்த மேடையில் நிற்பதே நான் பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் இல்லை, தமிழனாக பிறந்த பெருமையை இன்றைக்கு நான் அதிகமாக அடைந்து கொண்டிருக்கிறேன்.
இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில், அமர்ந்திருப்பது என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு-வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்–மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாடிய மகாகவி பாரதியார் இப்போது இருந்திருந்தால், இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு, நாராயணனும், சங்கரனும், ராஜராஜனும், ஆசீர் பாக்கியராஜும், வனிதாவும், நிகார் ஷாஜியும் பிறந்த தமிழ்நாடு, வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு என்று பாராட்டிப் போற்றியிருப்பார்.
அந்தளவுக்கு உலகத்தையே இந்தியாவின் பெருமையை உணர்த்துகின்ற தமிழர்களாக நீங்கள் இங்கே உயர்ந்து நிற்கிறீர்கள். அந்த உயரத்தில் இருக்கின்ற உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
எங்களுடைய எண்ணத்தை ஏற்றுக் கொண்டு வருகை தந்திருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகஸ்ட் 23-ஆம் நாள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை, உலகத்துக்கே முக்கியமான நாள்! நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள்!
1959-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013-ஆம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள்.
2008-ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023-ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. அதாவது நிலாவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது!
மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை!
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது. இப்படிப்பட்ட பெருமையை தமிழ்நாட்டுக்குத் தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் எல்லோரையும் தமிழ்நாடு முதலமைச்சராக கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன். உங்கள் எல்லோரையும் வணங்குகிறேன்.
இது பேரறிஞர் அண்ணா பெயரால், தலைவர் கலைஞர் அவர்களால் அமைத்த அரங்கம்! இந்த இடத்திற்கு அழைத்து உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துவது மிகமிக பொருத்தமான ஒன்று!
'இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன் உருவாகவில்லை? இந்த நாட்டில் ஏன் ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை? என்று ஏக்கத்துடன் கேட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
நம்முடைய தமிழ்நாட்டில்தான் இத்தனை அறிவியல் ஆளுமைகள் உருவாகி இருக்கிறார்கள். இந்த மேடையை பாருங்க அண்ணா' என்று சொல்வதற்குதான் பேரறிஞர் அண்ணா பெயரில் அமைந்திருக்கக்கூடிய இந்த அரங்கில் இந்த விழாவை நடத்துவது மிகமிக பொருத்தமானது என்று சொன்னேன்.
நம்ம தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவுதான். எதையும் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவுதான் தமிழறிவு!
'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு', இந்தக் குறளுக்கு இணையான அறிவியல் சிந்தனை இருக்க முடியாது. இப்படிப்பட்ட அறிவியல் அறிவைத்தான் நம்முடைய தமிழ் இலக்கியங்கள் நமக்கு கற்பித்திருக்கிறது.
நிலம், தீ, நீர், வளி விசும்போடு ஐந்தும்..' என்று அன்றைக்கு சொன்னது தொல்காப்பியம்.
நிலம் - தீ – காற்று - நீர் – வானம் – ஆகிய ஐந்தும் கலந்ததுதான் உலகம் என்று சொல்லியிருக்கிறது. நில அமைப்பை ஐந்தாக பிரித்து, பொருளை மூன்றாக பிரித்து வாழத் தொடங்கிய இனம் நம்முடைய தமிழினம். இதில் தமிழர்களுடைய வானியல் அறிவு தனித்தன்மை வாய்ந்தது. புறநானூற்றின் முதல் பாடலில் 'நிலம் ஏந்திய விசும்பும்' என்று வானைப் பற்றி பாடப்பட்டிருக்கிறது.
முடிவாக 400-ஆவது பாடலும், 'மாவிசும்பின் வெண் திங்கள்' என்று வானத்தைப் பாடித்தான் முடியும்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று சூரியனையும் நிலவையும் போற்றிப் பாடித்தான் சிலப்பதிகாரம் தீட்டினார் இளங்கோவடிகள்!
அணி நிலா-துணி நிலா-மணி நிலா-பணி நிலா என்று பாடியது சீவகசிந்தாமணி. இப்படி சூரியனையும்–நிலவையும் வானத்தையும் பாடாமல் தமிழ் இலக்கியங்கள் இருந்தது இல்லை. இதையெல்லாம் நான் சொல்லக் காரணம்... விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழ்நாட்டின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகள் உருவாக்கி இருக்கிறது.
இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து - படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ரெண்டு பேர் பெண்கள்.
இந்த மேடையே சமூகநீதியின் அடையாளமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. “என்னரும் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்விகற்றுப் பன்னறும் கலைஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமை மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?” என்று ஏக்கத்துடன் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அது இந்த நாள்தான்! அதன் அடையாளமாக இருப்பவர்கள்தான் இந்த ஒன்பது மேதைகளும்.
என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்கள்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மரியாதைக்குரிய டாக்டர் கே.சிவன் அவர்கள் – கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து – 2018-ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி. மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா-என்ற மென்பொருளை உருவாக்கியவர்.
சந்திரயான்-2 முழு வெற்றி அடையாத நிலையில, அவர் கண்கலங்கிய காட்சிகள் தான் ஆற்றிய பணிகள் அதன் மேல் அவர் வைத்திருந்த மாறாத பற்றின் அடையாளமாக வெளிப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது!
மரியாதைக்குரிய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் – பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்கின்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றியவர். மூன்றாண்டு காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களை செலுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர். சந்திரயான்-1 வடிவமைப்பில் இந்தியக் கொடியை பொருத்தியவர் இவர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து விண்ணைத் தொட்டவர் திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.
மரியாதைக்குரிய வி.நாராயணன் அவர்கள் – குமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் இவருடைய பங்கு அளப்பரியது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப் பயன்படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர் திரு. நாராயணன் அவர்கள்.
மரியாதைக்குரிய ஏ.ராஜராஜன் அவர்கள் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரியத் தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி. போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015-ஆம் ஆண்டு பெற்றவர் இவர்.
மரியாதைக்குரிய எம்.சங்கரன் அவர்கள் – திருச்சியில் பிறந்தவர். யு.ஆர்.ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான் 1,2,3 – ஆகிய மூன்று திட்டங்களிலும் அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கக்கூடியவர். சூரியனை பற்றி ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்தியா எல்-1 என்ற விண்வெளித் திட்டத்திலும் பணியாற்றியவர். தொழில்நுட்பக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் ஒருவர் நம்முடைய எம்.சங்கரன் அவர்கள்.
மரியாதைக்குரிய ஆசீர் பாக்கியராஜ் அவர்கள் – தூத்துக்குடியில் பிறந்தவர். ராக்கெட் எஞ்சின் – விண்கல இயந்திரங்களின் உயர்சோதனைத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ராக்கெட் நிலை ஒருங்கிணைப்புகளில் நவீன வசதிகளை நிறுவியவர்.
G.S.L.V.-யை இவருடைய குழுதான் ஒருங்கிணைத்தது. உயர் தொழில்நுட்பங்களை இணைப்பதில், இவருடைய பங்களிப்பு முக்கியமானது.
மரியாதைக்குரிய டாக்டர் எம்.வனிதா அவர்கள் – சென்னையைச் சேர்ந்தவர். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக இருந்த பெருமைக்குரியவர். மங்கல்யான் வடிவமைப்பிலேயும் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணியாற்றிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர். சிறந்த பெண் விஞ்ஞானி விருதையும் பெற்றவர்.
மரியாதைக்குரிய டாக்டர் நிகார் ஷாஜி அவர்கள் – தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். 1987 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் சூரியன் ஆய்வுத் திட்டமான ஆதித்தியா எல் ONE திட்டத்தினுடைய திட்ட இயக்குநராக செயலாற்றினார்.
மரியாதைக்குரிய டாக்டர் வீரமுத்துவேல் அவர்கள் – விழுப்புரத்தில் பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் நாள் ஏவப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான இயக்குநர் தான் நம்முடைய வீரமுத்து அவர்கள். ''அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நான் ஒரு ஆவரேஜ் மாணவன். அடுத்து எங்கே படிக்கவேண்டும், என்ன படிக்கவேண்டும் என்று எந்த ஒரு ஐடியாவும் எனக்கு இல்லை. அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை" என்று சொல்கின்ற அளவுக்கு சாதாரணப் பின்புலத்தில் பிறந்து சரித்திர சாதனையை படைத்திருக்கிறார் வீரமுத்து அவர்கள்.
இதில் தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பெருமை என்றால் சந்திரயான் – 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். 2008 அக்டோபர் 28-ஆம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது.
சந்திரயான்- 2, 2019 ஜூலை 15-ஆம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் அவர்கள் இருந்தார்.
இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த பெருமையை தமிழ்நாடு அரசு போற்றும் விதமாக, இரண்டு அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகதான் தமிழ்நாடு அரசு இந்தத் தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு, மேலும், மேலும் இந்தியாவிற்கு நீங்கள் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இரண்டாவது அறிவிப்பு என்னோட கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு மாணவர்கள் – இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில் – அறிவாற்றலில் – சிந்திக்கின்ற திறனில் – பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக அப்படி உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம்.
சென்ற ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறோம்.
10 இலட்சம் என்று இலக்கு வைத்திருந்தோம். ஆனால் 13 இலட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறோம். நம்முடைய மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம்.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வருகிறார்கள். அதற்குத் தகுதியானவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே அமர்ந்திருக்கும் இந்த ஒன்பது பேரை பாராட்டுவது அவர்களை பாராட்டுவது மட்டும் இல்லை, அவர்களைப் போல ஆளுமைகள் இன்னும் அதிகமாக உருவாகவேண்டும் என்று ஊக்கப்படுத்தவும் தான் இந்தப் பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியை 58 இலட்சம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை, நம்முடைய அரசு செய்திருக்கிறது.
இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மாணவ கண்மணிகளே! உங்களை நான் கேட்டு கொள்வது, அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமைத் திறனையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். இன்றைய மாணவர் சமுதாயத்திலிருந்து – இந்த மேடையில் இருக்கின்ற ஆளுமைகளைப் போன்ற அறிவியல் மேதைகள் உருவாகவேண்டும்! அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் இலக்கு! அந்த வகையில், இங்கே அமர்ந்திருப்பவர்கள் அறிவியலாளர்களாக மட்டும் இல்லை, அறிவியல் வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.
இவர்களுடன் சேர்த்து, பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள் – அறிவியல் ஆளுமைகள் – திறமைசாலிகளின் கூட்டு முயற்சியால் தான் இவை அனைத்தும் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய இஸ்ரோ தலைவர் மரியாதைக்குரிய சோம்நாத் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் அறிவியல் துறையில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. நம்மை விட அதிகமான தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், அதிகமான தொழில்நுட்ப அறிவுக் கூர்மை கொண்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.
பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றித் தொடரட்டும். சூரியன் பற்றியும் – நிலாவை பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
மனிதரை விண்வெளிக்கு அனுப்புகின்ற வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டைக் காப்போம்! நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம்! நன்றி, வணக்கம்!