மதுரை: தென்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’. இந்நூலகம் மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது. 2,13,338 சதுரடி பரப்பளவில் அமையபெற்றுள்ளது. இந்நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்க சுமார் ரூ.10 கோடி, தொழில்நுட்ப உபகரணங்களுக்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, ஏற்கெனவே அரசாணை பிறபித்து, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கட்டிட தளங்கள் விவரம்: 6 தளங்களை கொண்டுள்ள இந்நூலகத்தின் அடித்தளத்தில் (19314 சதுரடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுபாட்டு அறை, தபால் பிரிவுகள் அமைகின்றன.
>> முதல் தளத்தில் : (29,655) கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது.
>> 2-வது தளத்தில் : (29,655) தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.
>> 3-வது தளத்தில் : (29,655) ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன.
>> 4-வது தளத்தில் : (20,616) சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது.
>> 5-வது தளத்தில் : (20,616) அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
>> 6-வது தளத்தில் : (20,616) ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைகின்றன.
இந்நூலக கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறியது: "99 சதவீத கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இந்நூலகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணி தீவிரமாக நடக்கிறது. கட்டிடத்தின் முழு வடிவிலான கட்டுமான பணி நூறு சதவீதம் செப்டம்பரில் முடிந்தது. மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிந்தன.
கட்டிட நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப் பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் முடிந்து, ஜெர்மன் கண்ணாடிச்சுவர் பூச்சு பூசப்பட்டுள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கப்படுகிறது. முன்பகுதி யில், கலைஞரின் உருவச்சிலை மாடித்தோட்டத்துடன் நூல்களை படிக்கும் வசதி, கலைக்கூடமும் அமைக்கப்படுகிறது. உள் அலங்காரப் பணி தொடர்ந்து நடக்கின்றது.
சுமார் 2.50 லட்சம் நூல்கள்: ரூ.10 கோடி மதிப்பில் சுமார் ரூ. 2.50 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.16.7 கோடியில் மேஜை, நாற்காலி, புத்தகம் வைக்கும் அலமாரிகள், படிப்பதற்கு தேவையான மேஜைகள், பர்னிச்சர்களும் வாங்கப்படு கின்றன. ஏற்கனவே வாங்கிய நூல்கள் அதற்குரிய இடங்களில் அடுக்கி வைக்கும் பணிகளும் தொடர்ந்து நடக்கிறது. தற்போது, துறைகள் வாரியாக நூல்கள் அடுக்கி வைக்கும் பணிகளும் மும்மரமாக நடக்கின்றன. விரைவில் திறக்க ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் தென்பகுதிக்கென மற்றொரு கூடுதல் அடையாளமாக கலைஞரின் நூற்றாண்டு நூலகம் அமைகிறது என்ற தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், போட்டித் தேர்வர்களின் பாராட்டுகளையும் இந்நூலகம் பெறுகிறது.
கலைஞர் நூலகம் பற்றி தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா கூறுகையில், ‘‘மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பெரிய படிப்பகமாக மாறும். புத்தகம் வாங்கி படிக்க முடியாத ஏழை மக்கள் இங்கு வந்து படிக்கலாம். இந்நூலகம் தென்பகுதிக்கு கிடைத்த ஞானக்கொடை, அறிவுக்கொடை என்றே கூறலாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்த நூலகத்தில் படிக்கலாம் என்பது அதைவிட கூடுதல் சிறப்பு . அனைத்து துறைகள் பற்றிய தமிழ், ஆங்கில புத்தகங்கள் நிறைய இடம் பெறுகின்றன.
இதன்மூலம் போட்டித் தேர்வர்கள் பல்வேறு துறை சார்ந்த அரசு வேலை வாய்ப்புகளை பெறமுடியும். தமிழ் சங்கத்தைப் போன்று தமிழ் இலக்கியங்கள், இனி வரக்கூடிய ஒவ்வொரு நூலும் இங்கே இடம் பெறும். ஒரு சங்கப் பலகையாக இந்த நூலகம் திகழும்.வடக்கே அண்ணா நூற்றாண்டு நூலகம், தெற்கே கலைஞர் நூற்றாண்டு நூலகம் என, இரண்டும் சேர்ந்து பெரிய காவியமாக இம்மண்ணிலே வடிவம் பெறும்’’ என்றார்.