தமிழ்நாட்டில் பிரபல கோயில்களில் ஒன்றாக கருதப்படுவது சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர். இந்த சூழலில் இந்த கோயிலில் இருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட முன்னால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த கோயிலில் பக்தர்கள் அனைவரும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஆணை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அந்த கோயிலின் தீட்சிதர்கள் சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகையை வைத்திருந்தனர்.
அதாவது ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவதால் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். இந்த சூழலில் பக்தர் ஒருவர் கனகசபை ஏறி எல்லோருக்கும் வழிபட உரிமை உள்ளது என்று கூறினார். இதனால் தீட்சிதர்களுக்கு, அந்த பக்தருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கனகசபை மீது ஏறி எல்லோருக்கும் வழிபட உரிமை உள்ளது என கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்ததாகவும், அந்த அறிவிப்பு பலகையை நீக்குமாறு அந்த கோயிலின் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் அவர்களுடனும் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட அதிகாரி தீட்சிதர்கள் மீது புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் வைத்திருந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகையை, போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
கனகசபையில் ஏறி வழிபட தடை விதித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையானது தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிரானது என்பதால் அகற்றப்பட்டது. இதையடுத்து இன்று வழக்கம் போல் பக்தர்கள் கனக சபை மேடை ஏற அனுமதி வழங்கப்பட்டது. ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நான்கு நாட்கள் கனக சபை மேடை ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அறநிலையத்துறையின் தலையீடு காரணமாக பதட்டம் தணிந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே "ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத்துறைதான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதனடிப்படையில்ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது" என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.