சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் மற்றும் கலையரசன். இதில் சுரேஷ்குமார் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராகவும், கலையரசன் மாவட்டச் செயலாளராகவும் உள்ளனர். அதேபோல் சிவகாசி மாநகர பா.ஜ.க துணைத் தலைவராக இருப்பவர் பாண்டியன். இவருக்கு கார்த்திக் மற்றும் முருகதாஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பாண்டியனைச் சந்தித்த சுரேஷ் குமார் மற்றும் கலையரசன், உங்கள் இரண்டு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர். கார்த்திக்குக்குத் தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், முருகதாஸ்க்கு தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த ரூ. 11 லட்சம் வாங்கியுள்ளனர்.
ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் இது குறித்து பாண்டியன் மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது, ரூ. 2 லட்சத்திற்கு 5 காசோலைகளும் மற்றும் ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலையும் பாண்டியனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், ரூ. 2 லட்சம் மட்டும் பணம் கிடைத்துள்ளது. கொடுத்த பல காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் மீதியுள்ள ரூ.9 லட்சம் பணத்தைக் கேட்டபோது இருவரும் மிரட்டியுள்ளது.
இதனால் பாண்டியன் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் கலையரசனை கடந்த 15-12-22 அன்று கைது செய்தனர். சுரேஷ்குமாருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. அப்போது ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க ஜாமின் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு மே 12ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து விருதுநகர் குற்றப்பிரிவு போலிஸார் சுரேஷ்குமார் இன்று கைது செய்தனர்.