ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 % (4,05,753), மாணவர்கள் 91.45 % (3,49,697) பேர் அடங்குவர். தமிழ்நாட்டில் மொத்தம் 94.03 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சமூக வலைதள வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனம் தளர வேண்டாம் என்று ஊக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.