மவுத் வாஷ்பொதுவாக உடலில் வரும் சில நோய்களுக்கு காரணம் பல்லை சரியாக தேய்க்காததுதான் என சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனாலே பற்களை நாளுக்கு இரண்டு முறை துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் Brush brush brush your teeth twice a day என்று விளம்பரங்களும் வருகிறது.
அதோடு பற்களை துலக்கும் முறை என்று சில உள்ளது. அதன் படி செய்தால் பல்லில் எந்தவொரு கோளாறும் ஏற்பாடாமல் இருக்கும். ஆரம்ப காலத்தில் மக்கள் வேப்பங்குச்சிகளை வைத்து விளக்கி வந்தனர். அதன்பிறகு சாம்பல், பற்பொடி, பேஸ்ட்கள் தற்போது திரவ வடிவலான மவுத் வாஷ் என காலப்போக்கில் மாறியது. நாம் பற்களை சுத்தமாக வைக்காவிடில், உடலில் கிருமி தொற்றுகள் ஏற்படும்.
அதோடு நம் உடலும் பலவீனமாக காணப்படும். ஏனெனில், பற்களை சுத்தமாக வைக்காவிடில் பல் பிரச்னை ஏற்படும்; அப்படி பிரச்னை ஏற்பட்டால் நம்மால் உணவு உண்ண இயலாது. அப்படி உணவு உண்ணாவிடில் உடல் நலம் பாதிக்கப்படும். இது எவ்வளவோ பிரச்னைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. எனவேதான் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இங்கே ஒருவர் சுத்த மருத்துவர் என்ற பெயரில் 'பல்லு வெளக்காதீங்க' என்ற விளம்பரங்களை செய்து வருகிறார். மருத்துவர் என்று சொல்லும் புதின் சுரேஷ் என்பவர் இதுபோன்ற விளம்பரங்களை செய்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இவர் ஒட்டிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் "சர்க்கரை முதல் கேன்சர் வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற பல்லு வெளக்காதீங்க" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இணையத்தில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து புதின் சுரேஷை தனியார் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் நெறியாளர் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இதுகுறித்து பேசிய அவர், "நான் 12 வருடமாக பல்லு விளக்கவில்லை. வெளியில் சென்று யாரிடமாவது பேசும்போது அருமையாக இருக்கும். இதற்கெல்லாம் பேஸ்ட்தான் காரணம்.
பேஸ்ட் என்பது முழுக்க முழுக்க கெமிக்கல். அதில் இருக்கும் கெமிக்கல் ஈறுகளுக்கு பாதிப்பு. அதிலே 2 சிகெரட்டில் இருக்கும் தன்மை இருக்கிறது. எனவே அது மிகவும் ஆபத்து. நான் அந்த போஸ்டரில் கூட 'பல்லு வெளக்காதீங்க' என்று பொதுவாகதான் கூறியுள்ளேன்.
நான் பல் விளக்காததை பற்றி எனது குடும்பத்திலும் என்னை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது என்னுடைய விருப்பம். அதேபோல் அவர்களையும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இப்போது கூட சொல்லவே, பல் விளக்காதீங்க என்று.. ஆனால் அவர்கள் அதனை கேட்கமாட்டார்கள். நானும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை.
நல்லது ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம்.. ஆரம்பத்தில் 4 ஆண்டுகள் இதனை நாங்கள் இலவசமாகதான் சொல்லிக்கொடுத்தோம். அதன்பிறகு வாடகை அனைத்தும் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது. பின்னர்தான் ஒருவருக்கு 300 ரூபாய் என்ற கட்டணம் விதிக்கப்பட்டது.
அந்த கட்டணம் விதிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் பணத்தில் வாடகை செலுத்தி விட்டு, வருபவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு, மூலிகை டீ வழங்கப்படுகிறது. அதிலும் மீதி வருவதை நாங்கள் பிரித்து கொள்வோம். இதுவரை இதில் 5000-க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர்.
ஈரோடு, கோவை, திருநெல்வேலி என பல இடங்களில் இந்த வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சிலர் இதனை கூறும்போது ஒருமாதிரி பார்ப்பர்; சிலர் சரி என்று கேட்டுக்கொள்வர். இப்படி செய்வதால் எனக்கு பலமுறை மிரட்டலும் வந்துள்ளது. வகுப்பில் இருக்கும்போதே 5 பேர் கொண்ட கும்பல் என்னை மிரட்டியும் உள்ளனர்.
சுத்த மருத்துவம் என்றால் சுத்தம். 5 சுத்திகள் சைவர்கள் காலத்தில் இருந்தே உள்ளது. இதனை தொடர்ச்சியாக செய்தால் உடலில் எந்த நோயும் ஏற்படாது. நான் 12 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறேன்” என்றார்.
இவரது இந்த போஸ்டர் கடந்த 2018-ல் சென்னையில் ஒட்டப்படுவதற்கு முன்பே 2013-ல் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்போதே இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. சுத்த மருத்துவம் என்ற பெயரில் இவரது இந்த முறை மருத்துவ ரீதியான எந்த கருத்துக்களுக்கும் உட்படாதவை. இப்போதும் கூட மருத்துவர்கள் அனைவரும் பல் விளக்க வேண்டும் என்றுதான் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.