திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 63 வயதுமிக்க முதியவர் ஒருவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் சுண்ணாம்பு படிவம் படிந்திருந்ததாக கூறினர்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, இருதய குழாயில் ஏற்பட்ட சுண்ணாம்பு படிவ அடைப்புகளை நீக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு, அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முனுசாமி, மருத்துவர் கண்காணிப்பாளர் அருண் ராஜா உள்ளிட்ட மருத்துவர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இது குறித்து பேசிய அவர்கள், "இருதய குழாயில் ஏற்படக்கூடிய அடைப்புகளை சரி செய்ய பொதுவாக ஆஞ்சியோ சிகிச்சைதான் செய்யப்படும். ஆனால் இவருக்கு சுழற்சி ஆஞ்சியோ செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. எனவே இரத்த குழாயில் அதிகமான கால்சியம் படிமங்கள் இருந்தது அகற்றபட்டுள்ளது. இது முதல்முறையாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகும். ஆனால் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் மதிப்பு சுமார் 1.5 கோடியாகும்.
இது போன்று இரத்த குழாய்களில் படியக்கூடிய கால்சியம் படிமங்கள் புகைப்பிடிப்பவர்கள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றோர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சை ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதியவருக்கு் ரோட்டோ ஆப் லெட்டர் சிகிச்சை முறையில் செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார். அவரது உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை. அவர் இங்கே 2 நாட்களுக்கு மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்படவுள்ளார்." என்றார்.
முன்னதாக இதேபோல் இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்பு மற்றும் சுண்ணாம்பு அடைப்புகளை அதிா்வு அலைகள் மூலம் உடைக்கும் லித்தோட்ரிப்ஸி என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 61 வயது முதியவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை சாதனை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.