தமிழக கல்வித்துறையில் சமீபகாலமாக பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபடத் தொடங்கியுள்ளன.
அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு கல்லூரிகளில் ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.
அனைத்து மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘கலைத்திருவிழா’ திட்டமும் மாணவர்கள் சமுதாயத்தை மறுமலர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பேச்சு, ஓவியம் உள்ளிட்ட கலைத்திறமைகள் கொண்ட மாணவர்கள் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் பள்ளியில் படிக்கும் காலத்திலே இனி சூரியனாக பிரகாசிக்க முடியும்.
"மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழா திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைத்தல்
"கலை என்பது குழந்தைகள் தங்கள் கருத்துக்களை, தாங்கள் நம்புவதற்கும், சாத்தியமானவற்றை ஆராயவும் கற்றுக் கொள்வதற்கும் ஒரு இடம்." கலைச் செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது.
இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது, மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிருத்தி இவ்வாண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவிழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலைத் திருவிழா பல்வேறு கலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டைக் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும்.
கலைத் திருவிழா :
பிரிவு 1: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை
பிரிவு 2:9 மற்றும் 10 ஆம் வகுப்பு
பிரிவு 3: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
கீழ்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022 க்குள்
வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022 க்குள்
மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.2022 க்குள்
மாநில அளவில் 03.01.2023 முதல் 09.01.2023 க்குள்
அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய தலைமையாசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆய்வு அலுவலர்கள் அதனை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளியின் EMIS வழியாக ஒவ்வொரு போட்டியில் பங்கு பெறும் மாணவரின் விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அளவில் பதிவு செய்ய வேண்டும்.
போட்டிகள் முடிந்த பின் தேர்வான/ வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயரை பதிவு செய்ய வேண்டும். இந்த மாணவரின் பெயர் அடுத்த நிலைப் போட்டிக்கு வட்டார அளவில் பார்வையிட இயலும், வட்டார அளவிலும் தேர்வான/ வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயரை இவ்வாறே அந்த நிலையில் உள்ள பொறுப்பு அலுவலர் EMIS-ல் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறே மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டி வாரியாக தேர்வான மாணவ / மாணவியரின் பெயரும் முதன்மை கல்வி அலுவலரின் EMIS Login வழியாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்த மாணவரின் பெயர்களே மாநில அளவிலான போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான செயல்முறை விளக்க காணொளி TNSED youtube சேனலில் விரைவில் வெளியிடப்படும். அதனை பின்பற்றி அனைத்து நிலைகளிலும் தரவுகள் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
மேற்காணும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் மற்றும் இப்போட்டிகள் நடத்த தேவையான செலவினத்திற்கான நிதி ஒதுக்கீடு பட்டியலும் அனுப்பப்படுகிறது.
இணைப்பு :1. கலைத்திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள்
2. செலவின நிதி ஒதுக்கீடு பட்டியல் இத்துடன் இணைத்து மாநிலத் திட்ட இயக்குநருக்காக பெறுநர்: 1. அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
நகல் : 2. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். 3. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி), 4. அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், 1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை, சென்னை-9. 2.ஆணையர், பள்ளிக்கல்வி, சென்னை-6. 3. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-6. 4. இயக்குநர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6.” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.