தமிழ்நாட்டில் சனி,ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என அடுத்த மூன்றுநாள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் எவ்விதமான சிரமமும் இல்லாமல் வெளியூர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 610 சிறப்புப் பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மூன்று நாள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்குப் பொதுமக்கள் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்றும் நாளையும் சேர்த்து 610 சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ளது.
இன்று கோயம்பேட்டிலிருந்து 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை 185 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக கோயம்பேட்டிலிருந்து தினசரி 1950 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் நிலையில் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் விடுமுறை முடிந்தும் வெளியூர்களிலிருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்க போதுமான நடவடிக்கையைப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.