தமிழ்நாடு

எது தேச விரோதம்?.. இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி இது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எது தேச விரோதம்? என இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எது தேச விரோதம்?.. இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி இது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 'சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:-

இந்திய நாட்டுக்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்று சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது. மற்றொன்று, மாநிலங்களின் உரிமைகளைச் சிதைப்பது. இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. பல்வேறு இனம், மொழி,மதம், கலாச்சார, பண்பாட்டு மாறுபாடுகளைக் கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான குறிக்கோளுடன் வாழ்கிறோம்.

*அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை.

* அனைத்து தேசீய இனங்களுக்கும் சமமான உரிமைகள்.

* அனைத்து மதத்தவர்க்கும் சமமான வழிபாட்டு விருப்பங்கள்.

* கலாச்சார வேற்றுமைகளுக்கு எந்தத் தடையும் இல்லை.

* பண்பாட்டுப் பரிமாற்றங்களை ஒருவருக்கொருவர் செய்து கொள்வது.

* அனைத்து வளங்களும் கொண்ட மாநிலங்கள்.

* மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்து இருந்தாலும் - அண்டை மாநிலங்களோடு நட்புறவு.

* பொருளாதார ஏற்றுமதி - இறக்குமதியில் நல்ல உறவுகள் - என எத்தனையோ நல்ல நோக்கங்களுடன் அமைதியாக இந்தியா இருப்பதை சிலர் விரும்பவில்லை.

இதனைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இத்தகைய சக்திகள் தான் தேச விரோத சக்திகள்.இவைகள் தான் நாட்டுக்கு விரோதிகள்.இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உலைவைப்பவர்கள் இவர்கள் தான். இவர்கள் நம்மைப் பார்த்து தேசவிரோதிகள் - நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது.

அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள் - அனைத்து மொழிகளையும் ஒன்றாக மதியுங்கள் - அனைத்து இனங்களுக்கும் உரிமைகள் தாருங்கள் - அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களது வழிபாட்டு உரிமையில் தலையிடாதீர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் - என்று சொல்வது தேச விரோதமா? ஒரே மதம் - ஒரே மொழி - தான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேச விரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்க வேண்டிய கேள்வி இது மட்டும் தான். இது இந்தியக் கம்யூனிஸ்ட் கேட்க வேண்டிய கேள்வி மட்டுமல்ல இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories