தமிழ்நாடு

“கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி” : பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!

முதலமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி” : பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.07.2022) சென்னை, மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- ”நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக எத்தனையோ நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். அரசு நிகழ்ச்சிகளில், கழக நிகழ்ச்சிகளில் இதுபோன்ற பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில், பள்ளி நிகழ்ச்சிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன்.

“கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி” : பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்கிறபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவேனோ அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியை நான் படித்த கல்லூரியான இந்த மாநிலக் கல்லூரியில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியின்போது அதிகமான மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறிது இறுமாப்புடன் நின்று கொண்டிருக்கிறேன்.

முதலில் கையில் பட்டங்களுடனும் - மனதில் கனவுகளுடனும் அமர்ந்திருக்கும் நம்முடைய மாணவ – மாணவியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்! அமைய வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, அமையும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய சீனியர் - என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கு எல்லோரும் சொன்னார்கள், 1972-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ஆம் நாள், இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவனாகச் நான் சேர்ந்து படித்தேன். முழுமையாக என்னைக் கல்வியில் ஈடுபடுத்திக் கொண்டேனா என்றால் இல்லை. ஏனென்றால், அப்போதே எனக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் அதிகமான ஆர்வம் கொண்டவனாக, நான் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டேன்.

“கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி” : பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!

1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்காக, அதனுடைய பிரச்சாரத்திற்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராகச் சென்று - தொகுதி தொகுதியாகச் சென்று நான் நடத்தினேன். அந்தக் காரணத்தால், என்னால் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.

படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நான், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்டவர்கள், அதாவது மிசா என்ற அந்த கொடுமையான சட்டத்தை, நெருக்கடி நிலையை, திராவிட முன்னேற்றக் கழகம் அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதை எதிர்த்த காரணத்தால், கலைஞர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கழக ஆட்சி அன்றைக்கு கலைக்கப்பட்டது.

கலைக்கப்பட்டவுடன் 500-க்கும் மேற்பட்ட கழகத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு காலம் இருந்தேன். நினைத்து பார்க்கிறேன். அந்த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்தக் கல்லூரிக்கு வந்து நான் பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக உயர்ந்துள்ளேன் என்று சொல்லி, இதனையே நீங்கள் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது! விதிவிலக்குகள் என்பது விதிகள் ஆகாது! இதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவார்கள்!

அந்த வகையில் கல்வியைக் கட்டாயக் கடமையாக வலியுறுத்தி, இன்று ஒரு இயக்கமாகவே அதை நான் தொடங்கியிருக்கிறேன்.

கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து! அத்தகைய அறிவுச் சொத்துக்களை உருவாக்கித் தரக்கூடிய மகத்தான கல்லூரிதான், இந்த மாநிலக் கல்லூரி என்பதை நான் இங்கே பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கல்வியைக் கடல் என்று சொல்வார்கள். அந்தக் கடலோரத்தில் இருக்கும் கல்லூரி, இந்த மாநிலக் கல்லூரி. இப்படி கடலைப் பார்த்து இருக்கும் கல்லூரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். குளிரும் - தென்றலும் - குளுமையும் - இனிமையும் கலந்த சூழலில் இருக்கும் மாநிலக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு என்பதே ஒரு மிகப்பெரிய வாய்ப்பு!

அதிலும் - இந்தச் சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி, இந்த மாநிலக் கல்லூரி! 1840-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி இது. பொதுவாகப் பல்கலைக்கழகங்களுக்குக் கீழ்தான் எல்லாக் கல்லூரிகளும் வரும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட கல்லூரிதான் இந்த மாநிலக் கல்லூரி!

மாநிலக் கல்லூரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்துதான் சென்னைப் பல்கலைக்கழகமே தொடங்கப்பட்டது. எனவே, இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய் நிறுவனம் என்று சொல்வார்கள். தாய் நிறுவனத்தில் படித்த பிள்ளைகள் நீங்கள். உங்களது எதிர்காலம் நிச்சயம் சிறப்பாகத்தான் அமையும். கடந்த 182 ஆண்டுகால வரலாற்றில் பல லட்சம் பேருக்குக் கல்வியை வழங்கியதன் மூலமாக, பல தலைமுறைக்கும் கல்வியை வழங்கிய மாபெரும் கல்லூரியாக இது அமைந்திருக்கிறது.

இங்கே பலர் குறிப்பிட்டுச் சொன்னார்கள்,

திராவிட இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களான சர். பிட்டி தியாகராயர் முதல் டி.எம்.நாயர் வரை இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் தான்.

தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர் அவர்கள் இங்குதான் படித்திருக்கிறார்.

நோபல் பரிசு பெற்றிருக்கக்கூடிய சர்.சி.வி.ராமன் அவர்களும், சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களும் இந்த கல்லூரியில் படித்தவர்கள் தான்.

இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளை வகித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இங்கேதான் படித்தார்.

இத்தகைய பெருமைக்கும் - உயர்வுக்கும் காரணமான கல்லூரியில் படித்த நீங்கள் எல்லோரும் அறிவில் – ஆற்றலில் - சிந்திக்கும் திறத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்று முன்னேறி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வளர வேண்டும் என்று நான் மனதார உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

மாநிலக் கல்லூரியில் மொத்தம் 26 துறைகள் கலை - அறிவியல் பாடங்களில் உள்ளன. 4,645 மாணவ, மாணவியர் படிக்கும் மிகப்பெரிய கல்லூரியாக இது அமைந்திருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் மாநிலக் கல்லூரி மாணவர்களே அதிகளவில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இப்போது முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், முனைப்பான கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது இந்த மாநிலக் கல்லூரி. பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, விளிம்புநிலை மக்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி என்கிற வகையில் சமூகநீதிக் கல்லூரியாகவும் இது அமைந்திருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமான ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால், இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் நான் மிக மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

“கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி” : பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!

பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 94 பேரும், செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் பயின்று வருகிறார்கள். இவர்களுக்காக பி.காம், பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கிறது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது ஆட்சிக்காலத்தில்தான், இவை 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன என்பதும் பெருமைக்குரிய ஒன்று!

செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எம்.காம்., படிப்புக்கும், தமிழ்நாடு அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் இப்படி ஒரு வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு உதவுவதன் மூலமாக, மாநிலக் கல்லூரி மனித நேயக் கல்லூரியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் இந்தக் கல்லூரியில் பல்வேறு தனித்திறன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை நான் அறிவேன். எழுத்தாளர் - மாணவர் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இலக்கிய ஆளுமைகளை அழைத்து வந்து கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். திராவிட இயக்கத் தலைவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பை விளக்கும் கூட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தினால் உந்துதல் பெற்றுத் தொழில் முனைவோருக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் பல நடத்தப்பட்டு வருகின்றன.

திரைப்படப் பயிற்சி வகுப்புகள் மூலமாக ஒரு நல்ல சினிமாவை ரசிப்பது எப்படி என்ற அந்தக் கோணத்தில், மாணவர்களுக்குச் சினிமா கலை நுட்பங்களைக் கற்பித்து வருகிறார்கள்.

ஐந்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் இந்தக் கல்லூரியில் நடத்தப்பட்டிருக்கிறது. இளங்கலைப் பட்டம் பெற்று வெளியில் செல்லும் ஆயிரம் மாணவர்களில், 800க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் முன்னெடுத்து வரும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமன் அவர்களையும், கல்லூரிப் பேராசிரியர்களையும், மாணவ மாணவியரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாநிலக் ‘கல்லூரி’யாக இருந்தாலும், மாநிலக் கல்லூரி பல்கலைக்கழகம் போல இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகளை விடாமல் தொடருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பல ஊர்களில் பல அரசு நிகழ்ச்சிக்கு நான் செல்கிறபோது, ஆங்காங்கே சில அறிவிப்புக்களை அரசின் சார்பில், முதலமைச்சர் என்கின்ற முறையில் நான் வெளியிடுவது உண்டு. ஆக, நான் நேற்றிரவு, நாளை நான் படித்தக் கல்லூரிக்குச் செல்கிறேன். அங்கே சென்று என்ன அறிவிப்புக்களை வெளியிடலாம் என்று அதிகாரிகளோடு கலந்து பேசி, யோசித்துக் கொண்டிருந்தபோது, சில முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதை இப்போது உங்கள் முன்னால் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

இந்த சிறப்புக்குரிய மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்கான ஒரு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். 2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும்.

இங்கே சட்டமன்ற உறுப்பினர் தம்பி உதயநிதி பேசுகின்றபோது கூட, ஒன்றைச் சுட்டிக்காட்டினார். அதே போல நாடாளுமன்ற உறுப்பினரும் காரில் வரும்போது என்னிடத்தில் எடுத்துச் சொன்னார். ஆக, நான் இந்த கோரிக்கை வைத்தது மட்டும் நீங்கள் விட்டுவிடக் கூடாது, உங்களுக்கு என்று தொகுதி மேம்பாட்டு நிதி இருக்கிறது. எனவே நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதிமாறனையும், சட்டமன்ற உறுப்பினராகக்கூடிய தம்பி உதயநிதியையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

முதற்கட்டமாக இந்த இரண்டு அறிவிப்புகளையும் மாநிலக் கல்லூரியின் கல்வித் தொண்டுக்காக நான் அறிவிக்க விரும்புகிறேன்.

பள்ளிகள், கல்லூரிகள் என்பவை படிப்பை மட்டுமல்லாமல், பாடங்களை மட்டுமல்லாமல், மாணவ மாணவியருக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு!

இந்தக் காலத்தில் பள்ளிகளை அதிகம் திறந்து விட்டோம். கல்லூரிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். பள்ளி, கல்லூரிச் சாலைக்குள் அனைவரும் வர வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறோம்.

பணம் அதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற காரணத்தால், பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. கல்விக்காகச் செலவு செய்வதைத் தாண்டி, படிக்க வந்தால் 1000 ருபாய் என்று அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கும் என்ற ஒரு தாயுள்ளம் படைத்த அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அனைவரும் படிக்க வேண்டும், அதற்கு அனைவரும் முன் வரவேண்டும், பல முன்னேற்றங்களை நீங்கள் பெற்றாக வேண்டும், அனைத்து வாய்ப்புகளையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் நம்முடைய திராவிட இயக்கம்.

சமூகநீதி என்ற தத்துவமே பிள்ளைகளின் கல்விக்காகத் தான், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகத்தான் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு சாமானியர்களைக் கை தூக்கி விடும் சமூகநீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வரும் நிலையில், அந்த வாய்ப்பை மாணவ, மாணவியர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

படியுங்கள்! பட்டம் பெறுங்கள்!

ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

எந்தப் பட்டமாக இருந்தாலும், அதில் உள்ள உயர்ந்த நிலையை அடையுங்கள்!

இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் முனைவர் பொன்முடி அவர்கள் எத்தனை பட்டங்கள் வாங்கி இருக்கிறார் தெரியுமா?

சட்டப் படிப்பு

எம்.ஏ. வரலாறு

எம்.ஏ. அரசியல் அறிவியல்

எம்.ஏ. பொதுத்துறை நிர்வாகம் ஆக இப்படி பல பட்டங்களைப் பெற்றவர்.

அது மட்டுமல்ல, அதைத் தாண்டி, அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கலைஞர் கூட அடிக்கடி அவரை சொல்கிறபோது பொன்முடி என்று சொல்ல மாட்டார், அறிவுமுடி என்று தான் கூப்பிடுவார் பாசத்தோடு. அந்த அளவுக்கு ஆற்றலைப் பெற்றவர். எந்த அவையாக இருந்தாலும், எந்தப் பொருளாக இருந்தாலும், அதைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடிய திறமையைப் பெற்றவர் பொன்முடி அவர்கள். கல்லூரிப் பேராசிரியராக இருந்து, இன்று பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக இருக்கிறார் என்றால், இதற்குக் காரணம் அவரது கல்வித் திறனும் அறிவாற்றலும்தான்.

அத்தகைய ஆற்றலைப் பெற்றவர்களாக மாணவ, மாணவியர்கள் இருக்கவேண்டும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். இந்தச் சிறப்பு கற்றோருக்கு மட்டும்தான் உண்டு, மற்றோருக்கு இல்லை என்பதை உணருங்கள். குறிப்பாக, பெண்கள் மிகுதியாகக் கல்வி பெற வேண்டும். 'கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம்' என்று பாடினார் பாவேந்தர் அவர்கள்.

பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவது என்பதோடு மட்டுமல்ல, அதோடு முடிந்து விடுவது இல்லை, பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும்.

பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும். படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், 100-க்கு 100 மதிப்பெண் வாங்கிய பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறார்கள். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் இருக்கக்கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.

அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பெண்கள் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

50 விழுக்காடுதான் இடஒதுக்கீடு என்று சொன்னாலும், நான் மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இன்றைக்கு 56 விழுக்காடு பெண்கள் அந்தப் பொறுப்புகளை அடைந்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. அதில் பெரும்பாலானோர் பெண்கள் கலந்து கொண்டார்கள். இப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதை பார்க்க முடியுமா? முடியாது.

இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி பெற்றவர்களுடைய விழுக்காடு என்ன? இன்றைய விழுக்காடு என்ன என்பதைப் பார்த்தால்தான், திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியும். இதைச் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் தயவுசெய்து தவறாகக் கருதிவிடக்கூடாது. எத்தகைய அறிவுச்சூழல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர வேறு அல்ல.

கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது. உயர்கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்து, உலகச் சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவர்களையும் போட்டியாளர்களாக மாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி. அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கக்கூடிய ஆட்சி தான் இந்த ஆட்சி. அத்தகைய போட்டியாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள், வெற்றியாளர்களாகவும் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். உங்கள் கனவுகளையும், உங்களை உருவாக்கிய பெற்றோரின் கனவுகளையும், இந்த நாட்டின் கனவுகளையும் நிறைவேற்றுங்கள், நிறைவேற்றுங்கள், நிறைவேற்றுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories