தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,"12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் நடைபெறும்" எனவும் தெரிவித்தார். மேலும் 12-ம் வகுப்பு தேர்வை 9.12 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும், 97.27 % தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்தையும், 97.02 % தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் எனவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தவிர மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்த கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை ஆர்வத்துடன் பார்த்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.