தமிழ்நாடு

“தி.மு.கவை வீண்வம்புக்கு இழுக்காதீங்க..” : ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி MP எச்சரிக்கை!

“தி.மு.க மீது அவதூறாகப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் எல்.முருகன். இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால் தி.மு.க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்" என ஆர்.எஸ்.பாரதி MP எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தி.மு.கவை வீண்வம்புக்கு இழுக்காதீங்க..” : ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி MP எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்!" என தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., விடுத்துள்ள அறிக்கையில், “பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 80 ஆண்டுகாலத்திற்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவதூறாக பேசுவதும் - கருத்து தெரிவிப்பதையும் எல்.முருகன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்துகொள்ள வேண்டும்.

தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்.

ஏற்கனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாவும் – அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories