சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், உதவி ஆய்வாளர் விஜய் தலைமையில் காவலர்கள் சதாசிவம், முகமது பாவா மற்றும் சரத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையும் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை வ.ஊ.சி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது போலிஸாரை பார்த்து அவர்கள் ஓட்டம் பிடித்திருக்கிறார்கள்.
இதில் நான்கு பேரை தனிப்படை போலிஸார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மேற்கு முகப்பேரை சேர்ந்த பாண்டுரங்கன், திருப்பதியைச் சேர்ந்த கோபிநாத், கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ் குமார், கிழக்கு முகப்பேரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என தெரியவந்தது
மருத்துவரின் பரிந்துரையின்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 வகையான வலி மற்றும் மயக்க மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் என 1000 மாத்திரைகள் 86 ஊசிகள் 6 செல்போன்கள், ஒரு இருசக்கர வானத்தை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து 4 பேர் மீதும் போலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.