பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியை ஆட்சி மொழியாக திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.
இருப்பினும் பா.ஜ.க பல்வேறு வடிவில் இந்தியை திணிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி., தனது ட்விட்டர் பதிவில், "இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது; அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் #stopHindiImposition என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.