பா.ஜ.க, உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் அ.தி.மு.கவை பின்னுக்குத் தள்ளியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பா.ஜ.க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் நகப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லாமல் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தம்வசமாக்கியுள்ளது.
சென்னையில் சில வார்டுகளில் அ.தி.மு.கவை பா.ஜ.க ஓவர்டேக் செய்துள்ளது. அ.தி.மு.க சென்னையில் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களின் கோட்டைகள் என கருத்தப்பட்டு வந்த பல பகுதிகளை தி.மு.க தகர்த்தெறிந்துள்ளது. கோவை மண்டலத்தில் வலிமை வாய்ந்தது அ.தி.மு.க என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் 3 வார்டுகளில் மட்டுமே வென்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் அ.தி.மு.கவை விட பா.ஜ.க அதிக இடங்களில் வென்றுள்ளது.
அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பா.ஜ.க, உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் அ.தி.மு.கவை பின்னுக்குத் தள்ளியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.