கள்ள ஓட்டு போடப்பட்டதாக பா.ஜ.க மாநில தலைவர் கொந்தளித்த நிலையில், பூத் ஏஜெண்டுகளின் கவனக்குறைவால் பரபரப்பு ஏற்பட்டதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை அண்ணா நகர் கிழக்கு - நியூ ஆவடி சாலை குஜ்ஜி தெருவிலுள்ள சென்னை மிடில் ஸ்கூலில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களிக்க உள்ளார். அதே வாக்குச்சாவடிக்கு பி.முருகன் என்பவர் வாக்குப்பதிவு செய்ய வருகையில், பூத் ஏஜெண்டுகள் தவறுதலாக இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் அவரது வாக்கை பதிவு செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டது என்றும், தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கொந்தளித்தார்.
இந்த விவகாரம் குறித்து, வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், வாக்களித்த பி.முருகன் என்பவரிடமும் டி.பி.சத்திரம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வாக்குப்பதிவு மைய ஏஜெண்ட் தவறுதலாக எல்.முருகனை டிக் செய்தது தெரியவந்தது.
இதனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் யார் மீதும் தவறில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எந்த இடையூறும் இல்லாமல் மாலை வாக்குப்பதிவு செய்வார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கள்ள ஓட்டு போடப்படவில்லை என தேர்தல் அலுவலர், தம்மிடம் தெரிவித்ததாகவும், சற்று நேரத்தில் வாக்களிக்க இருப்பதாகவும் ஒன்றிய தெரிவித்துள்ளார்.