73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக சென்னை ராஜாஜி சாலை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் மரியாதை செலுத்தினார். சென்னை போர்நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
நாடு முழுக்க இன்று 73வது குடியரசுத் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அங்கு அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது.
தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு வீர தீர விருதுகளையும், சாதனைகள் செய்தவர்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முப்படை வீரர்கள், காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக மிகுந்த கட்டுப்பாடுகளோடு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் காரணமாக பொதுமக்கள் இந்த நிகழ்வுகளை காண அனுமதிக்கப்படவில்லை.
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுத்தன.