மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
2010 முதல் 2019 ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி, கௌரவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது
2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செம்மொழிக்கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது.
சென்னை, பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குத் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட 16.586 ஏக்கர் நிலத்தில், ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் 12.01.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்துக் 'கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை'யை நிறுவினார்.
இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் கலைஞர்
மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் அடங்கியதாகும்.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
அறக்கட்டளை துவங்கப்பட்ட பின் 2009 ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8-ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் மீது ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.1.2022) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில்,
2011 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் பொன்.கோதண்டராமன் அவர்களுக்கும் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
2012 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
2013 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்களுக்கும் (மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)
2014 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு.மோகனராசு அவர்களுக்கும் (மேனாள் பேராசிரியர் & தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
2015 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கும் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை)
2016ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கா.ராஜன் அவர்களுக்கும் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)
2018 ஆம் ஆண்டிற்கான விருதினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை)
2019 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு.சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)
ஆகிய விருதாளர்களுக்கு விருதுடன் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
2010 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் வீ.எஸ்.ராஜம் (Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania, USA) மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany) ஆகியோர் இவ்விழாவிற்கு வர இயலாததால் அவர்களுக்கு பிறிதொரு நாளில் விருது வழங்கப்படும்.
இவ்விழாவில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள்
ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, க.கணபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.