தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்ற கனிமொழி எம்.பி நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், நள்ளிரவு நேரத்திலும் தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள ஆசிரியர் காலனி பகுதிக்கு திடீர் விசிட்டாக சென்று, ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் , ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
மேலும் அப்பகுதி மக்களிடமும் குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றப்படும் என உறுதி அளித்தனர். நள்ளிரவு நேரத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மழைநீரை அகற்ற ஆய்வு மேற்கொண்டது மக்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.