திண்டுக்கல் ஆவின் ஒன்றிய அலுவலகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்ற புகார் எழுந்த நிலையில், ஆவின் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், கொடைக்கானல், வத்தலக்குண்டு, நத்தம் ஆகிய வழித்தடங்களில் பால் வினியோகம் செய்வதற்கு ஏழு பேர் கொண்ட விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தூரத்தை பொறுத்து லிட்டர் ஒன்றுக்கு 90 பைசா முதல் 166 பைசா வரை பணம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது அப்போதைய ஆவின் பெருந்தலைவராக AT செல்லச்சாமி இருந்து வந்தார். ஏழு பேருக்கு பால் விநியோகம் செய்யும் உரிமை வழங்கப்பட்டதை நிறுத்திவிட்டு கணேசன் என்பவருக்கு மட்டுமே மாவட்டம் முழுவதும் பால் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதிலும் லிட்டருக்கு ரூ 2.70 என கூடுதலாக வைத்து வழங்கப்பட்டது. இதனால் மாதந்தோறும் திண்டுக்கல் ஆவினுக்கு ரூ. 6 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து மெர்சி என்ற பால் விநியோகஸ்தர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கணேசனுக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் புதிதாக டெண்டர் விட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சியில் இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் மீண்டும் புதிதாக கணேசனுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. கூடுதல் தொகைக்கு டெண்டர் விடப்பட்டதால் கடந்த 20 மாதங்களாக திண்டுக்கல் ஆவினுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மெர்சி சென்னையில் உள்ள ஆவின் லஞ்ச ஒழிப்பு போலிஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்று 26.11.21 ஆவின் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் கோபி என்பவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு திண்டுக்கல் கோவிந்தாபுரத்திலுள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.