தமிழ்நாடு

“பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 1.05 லட்சம் தன்னார்வலர்கள் நியமனம்” : அமைச்சர் முக்கிய தகவல்!

சுமார் 1.05 இலட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 1.05 லட்சம் தன்னார்வலர்கள் நியமனம்” : அமைச்சர் முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 27.10 மி.மீட்டர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 271.68 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 10.11.2021 வரை 388.10 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 255.2 மி.மீட்டரை விட 52 சதவீதம் கூடுதல் ஆகும்.

முக்கிய நீர்த்தேக்கங்கள், ஏரிகளில் நீர் இருப்பு விபரம்

தமிழ்நாட்டில் முக்கியமான 90 நீர்த்தேக்கங்களில், 53 நீர்த்தேக்கங்கள் 76 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன. 14,138 ஏரிகளில் 9,153 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன, இவற்றுள் 3,691 ஏரிகள் 100 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன.

மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன.

நிவாரண முகாம்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1,343 நபர்கள் 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 13,39,670 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளுள், 240 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 160 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 1 சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

சாலைகளில் விழுந்த 116 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,265 மருத்துவ முகாம்கள் மூலம் 38,780 நபர்கள் பயனடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 46 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 325 இராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 7,180 புகார்கள் வரப்பெற்று, 3,593 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதர மாவட்டங்கள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், 3,154 நபர்கள் 100 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு-

செங்கல்பட்டு மாவட்டத்தில், 720 நபர்கள், 36 நிவாரண முகாம்களிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 822 நபர்கள், 26 நிவாரண முகாம்களிலும்,

நாகப்பட்டினம் மாவட்டத்தில், 202 நபர்கள், 3 நிவாரண முகாம்களிலும்,

பெரம்பலூர் மாவட்டத்தில், 48 நபர்கள், 1 நிவாரண முகாம்களிலும்,

புதுக்கோட்டை மாவட்டத்தில், 201 நபர்கள், 4 நிவாரண முகாம்களிலும்,

திருவண்ணாமலை மாவட்டத்தில், 258 நபர்கள், 7 நிவாரண முகாம்களிலும்,

விழுப்புரம் மாவட்டத்தில் 903 நபர்கள், 21 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 3,670 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பருவமழை காலத்தில், நோய் தொற்றை தவிர்க்கும் பொருட்டு 1,523 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 54,040 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் எட்டு குழுக்கள், அதாவது கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி பகுதிக்கு மூன்று குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு, நிவாரணம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 12 மூத்த இந்திய காவல் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த, எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்களும், வடக்கு வட்டாரத்திற்குடாக்டர் டி. கார்த்திகேயன், இ.ஆ.ப., மத்திய வட்டாரத்திற்கு பங்கஜ் குமார் பன்சால், இ.ஆ.ப., மற்றும் தெற்கு வட்டாரத்திற்கு டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., ஆகிய மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திருமதி. அமுதா, இ.ஆப., நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் வகையில், ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் குறைந்தபட்சம் 2 தன்னார்வலர்களை கண்டறிந்து, பயிற்சி அளித்து, சமுதாய அளவிலான மீட்புப் படையினை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதன் அடிப்படையில், நீச்சல் தெரிந்தவர்கள் 19,547, மரம் அறுக்கத் தெரிந்தவர்கள் 15,912, பாம்பு பிடிப்பவர்கள் 3,117, கால்நடைகளின் பாதுகாப்பிற்காக 19,535 என சுமார் 1.05 இலட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்களை மீட்கும் பணியிலும், விழுந்த மரங்களை அகற்றுதல் மற்றும் உணவு அளிக்கும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கவும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட கால தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை குறைக்க இயலும் என்பதால், 4.9.2021 அன்று தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற மாநில ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகள் மூலம் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், கோவிளம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளும், 11 கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் பணிகளும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள நகராட்சி பகுதிகளில் வெள்ளத் தடுப்புப்பணிகளும் 513.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் 20 முதல் 30 சென்ட்டி மீட்டர் மழை எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை / வெள்ள நீர் சூழ வாய்ப்புள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை கண்டறிய வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பணியினை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வர மறுக்கும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு உரிய உதவிகள் செய்து தர ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு, போதுமான அளவு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக விழும் மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற தேவையான மர அறுப்பான்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகக்கூடிய நீர்நிலைகளை கண்டறிந்து, இந்த நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய தேவையான அளவு மணல் மூட்டைகளை வைத்திருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories