தி.மு.கவின் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து 2 பேரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. இதில், தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
தி.மு.க வேட்பாளர்களின் வெற்றி உறுதியானதால் பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தி.மு.கவின் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தி.மு.க வேட்பாளர்கள் கனிமொழி என்.வி.என்.சோமு, ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலருமான சீனிவாசன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.
முன்னதாக, மாநிலங்களவையில் காலியாக இருந்த ஒரு இடத்தில், தி.மு.கவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி சமீபத்தில் தேர்வானார். இதன் மூலம் மாநிலங்களவையில் தி.மு.க எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.