பொதுத்துறை நிறுவனங்களை போன்று அரசு சார்ந்த சிறு துறைகளையும் ஒன்றிய பாஜக அரசு தனியாருக்கு தாரைவார்த்துள்ளது விலைவாசி உயர்வை ஏற்படுத்தியுள்ளது என தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.
அவ்வகையில் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் கார் நிறுத்தத்திற்கு மட்டும் ஏக விலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, கார் பார்க்கிங் செய்வதற்கு மட்டும் முதல் மூன்று மணிநேரத்திற்கு ரூ.30, அடுத்த மூன்று மணிநேரத்திற்கு ரூ.50, அதற்கடுத்த ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் 75 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் ரயில் நிலையத்தில் 21 மணிநேரத்திற்கு மேல் கார் பார்க்கிங் செய்யப்பட்டதற்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பான ரசீது இணையத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து மதுரை ரயில் நிலைய பார்க்கிங் நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், பார்க்கிங் கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக குறிப்பிட்டு கட்டண ரசீதையும் இணைத்துள்ளார்.