வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 2-ல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனல் மின் நிலையத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யும் இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சர் அறிவுறுத்தல் அடிப்படையில் மின்சார உற்பத்தி நிலையங்களில் ஆய்வு செய்து பாராமரிப்பு பணிகளை வேகப்படுத்த சாம்பல் கழிவுகளை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம்.
கடந்த ஆட்சியில் பராமரிப்பு தனியாருக்கு கொடுக்கப்பட்டது, தனியார் நிறுவனம் முறையாக பரிமரிப்புகளை சரியாக செய்யவில்லை. அந்த பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மின் உற்பத்தி செய்வதற்கான பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.
மின் இணைப்பு புகார்களை மின் இணைப்பு எண்களோடு புகார் அளித்தால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் தேர்தலை மனதில் வைத்து பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும் தற்போது முதலமைச்சர் உத்தரவின் பேரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சொத்துமதிப்பு உயர்ந்துள்ளதன் அடிப்படையில் ஆளுநரிடம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திலும் தெரிவித்திருந்தார்.
3 மாத ஆட்சியில் திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என்ற சிறப்பை முதலமைச்சர் பெற்றுள்ளார். 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் கூறிய வாக்குறுதிகளான மக்களுக்கு இலவச செல்போன் போன்ற திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியதா என கேள்வியெழுப்பிய அவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்தார்.