தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக சிவகுமாரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதலமைச்சரின் இந்த உத்தரவை அடுத்து சென்னை எழும்பூர் உள்ள அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் இன்று குறிஞ்சி என்.சிவகுமார் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சிவகுமார், "நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் லாபத்தில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்படாத அரசு செட்டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இணைய வழியில் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே கிராமத்தில் தரமான இணைய வசதிகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓ.டி.டி தளமும், அரசு கேபிள் டி.வி வழியாக பொதுமக்களுக்கு ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்ட கேபிள் ஆபரேட்டர்கள், கூடுதல் கட்டணத்திற்கு ஆசைப்பட்டு தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.