கொரோனாவின் இரண்டாம் அலையில் இருந்து நாட்டு மக்கள் மீளும் நிலையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு பொதுமக்கள் தலையில் பேரிடியாக உள்ளது என தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.
தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
இந்திய குடிமக்களுக்கு சமீபகாலமாக தங்கம், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் பேரை கேட்டாலே தலை சுற்றும். சர்வதேச சந்தையை காரணம் காட்டி இவற்றின் விலை அடிக்கடி ஜெட் வேகத்தில் பறக்கிறது. இவ்வாரத்தில் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்தது. பொதுமக்களுக்கு அந்த வேதனையின் காயம் ஆறுவதற்கு முன்பே காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.25.50 கூடியுள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.84 அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே சிலிண்டர் விலை ஏறுமுனையில் உள்ளது. சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு கடந்த பிப்ரவரி ஒரு கசப்பான மாதமாகும். அம்மாதத்தில் மட்டுமே 3 முறை விலை உயர்த்தப்பட்டதோடு, ரூ.710ல் இருந்து சிலிண்டர் விலை ரூ.810 ஆக மாறியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல ஏறுமுனையில் சென்ற சிலிண்டர் விலை நேற்று 850.50 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சிலிண்டர் விலை இருமடங்கு உயர்ந்திருப்பது சாமானிய மக்களை அதிகம் பாதிக்க கூடியதாகும். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் சிலிண்டர் விலை ரூ.406 ஆக இருந்தது. 5 ஆண்டுகள் கழித்து இப்போது சிலிண்டர் விலை ரூ.850 ஆக மாறியுள்ளது. 5 ஆண்டுகளில் 110 சதவீத விலை உயர்வு கடும் பாதிப்பையே காட்டுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்திய குடிமக்கள் வாழ்வாதாரம் இன்றி திண்டாடுகின்றனர். அரிசி, எண்ணெய் என அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்காதா என ஏங்குவோர் ஒரு பக்கம். மானியத்தை நம்பியே காலம் கடத்துவோர் மறுபக்கம். சுற்றுச்சூழலை காக்கவும், பெண்களின் சுமையைக் குறைத்து, உடல்நலத்தை பாதுகாக்கவும் மிகவும் அவசியமானதாக விளங்கும் சிலிண்டர்களின் விலை உயர்வில் ஒன்றிய அரசின் மானியமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
கடந்த 2019ம் ஆண்டு சிலிண்டருக்கான மானியம் ரூ.243 ஆக இருந்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் ரூ.25 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாகக் கருதிய ஒன்றிய அரசு, அதன்மீது எந்த வரியும் விதிக்கவில்லை. முழுமையான வரிவிலக்கு அளித்தது.
அதனாலேயே ஏழைகளும் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நிலைக்கு உயர்ந்தனர். ஆனால், இப்போது சமையல் எரிவாயு மீதான மானியம் குறைக்கப்பட்டு, 18% ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை.
கொரோனாவின் இரண்டாம் அலையில் இருந்து நாட்டு மக்கள் மீளும் நிலையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு பொதுமக்கள் தலையில் பேரிடியாக உள்ளது. சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, அதற்கான மானியத்தை உயர்த்துவதே ஒன்றிய அரசு மக்களுக்கு செய்யும் நன்மையாகும்.