சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், சென்னை கோவைக்கு இணையாக மதுரை தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில் துறை திட்டமிட்டுள்ளது என்றார்.
மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவங்களை உள்ளடக்கிய ஃபோரம்( forum) அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் அதே சலுகைகளை தென்னக பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கினாலும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது. கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ஜூலை 15 ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள புதிய தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறினார்.
நாளை முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி கொற்கை, சிவகளை , ஆதிச்ச நல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.