பெங்களூரிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 11 மணிக்கு 28 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளான சென்னையை சோ்ந்த முகமது அா்ஸ்சத்(22), தாரிக் ரகுமான்(29) ஆகிய இருவா் முகக்கவசங்களை கழற்றி பாக்கெட்களில் வைத்துக்கொண்டு பயணம் செய்தனா்.
சக பயணிகள் அவா்களை முகக் கவசங்களை அணியும்படி கூறினா். ஆனால் அவா்கள் அணிய மறுத்துவிட்டனா். இதையடுத்து சக பயணிகள் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனா். உடனே விமானப் பணிப்பெண்கள் வந்து இருவரையும் முகக்கவசங்கள் அணியும்படி உத்தரவிட்டனா்.
ஆனால் இரு பயணிகளும், நாங்கள் விமானத்திற்குள் தானே இருக்கிறோம்? எதற்காக முகக்கவசம் அணிய வேண்டும்? காரில் செல்பவா்கள் கூட முகக்கவசங்கள் அணிவதில்லை என்று எதிா்வாதம் செய்தனா். இதனால் விமானப்பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகாா் செய்தனா். இதையடுத்து விமானி உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தின் கதவுகள் திறந்ததும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறினா். அவா்களை பாா்த்ததும், அதுவரை முகக்கவசங்கள் அணிய மறுத்து ரகளை செய்து வந்த இருவரும், அவசரமாக மாஸ்க்குகளை எடுத்து அணிந்தனா். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் விமானத்தை விட்டு இறக்கி, இண்டிகோ ஏா்லைன்ஸ் அலுவலகம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். அப்போதும் இருவரும் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று விவாதம் செய்தனா்.
இதையடுத்து இன்று அதிகாலை பயணிகள் இருவரையும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீஸ் விசாரணையில் இருவரும் கோழிக்கறி வியாபாரிகள் என்றும், வியாபார விசயமாக பெங்களூா் சென்று திரும்பியதாகவும் தெரியவந்தது. இருவரிடமும் மேலும் விசாரணை நடத்துகின்றனா்.