தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தபிறகு கொரோனா தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, தடுப்பு மருந்துகள் கொள்முதலில் தீவிரம் காட்டுவது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, வி.சி.க, ம.தி.மு.க, பா.ஜ.க, சி.பி.ஐ.எம், சி.பி.ஐ, ம.ம.க, கொ.ம.தே.க, த.வா.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், முழு ஊரடங்கின் தளர்வுகளை பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே, இந்த தளர்வுகளை நீட்டிக்கலாமா அல்லது ஊரடங்கை தீவிரப்படுத்தலாமா எனக் கருத்தை தெரிவிக்குமாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதையடுத்து, முழு ஊரடங்கை தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவையாவன:
தீர்மானம் - 1
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் - 2
நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலக் கட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் - 3
நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் - 4
நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் - 5
அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.