தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசு பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவையாவன:
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை யல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.