“அதோ இருக்காரு பாரு… அவர்தான் பெரியார்…”
கருப்புச் சட்டையுடன் குட்டை உருவமாக மேடையில் மைக் இல்லாமலேயே கனத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து அப்பா சொல்ல, ஏழு வயதுப் பையனான ராமய்யாவுக்கு வியப்பு.
சின்ன சின்ன வாக்கியங்களில் அவர் பேசிய விஷயங்கள் முழுக்கப் புரியாவிட்டாலும் அவர் மீது ஒரு மரியாதை. சிறுவயதில் பையன்களைக் கோவில்களுக்கு அழைத்துச் செல்வது மாதிரி மாயூரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டங்களுக்கு, மகன் ராமய்யாவை அழைத்துச் சென்றார் கதர்க் கடை கல்யாணசுந்தரம்.
மாயூரம் அருகே கொண்டத்தூர் கிராமத்தில் வசித்தபடி, காங்கிரஸ் ஈடுபாட்டுடன் மாயூரத்தில் கதர்க்கடை நடத்திக் கொண்டிருந்தாலும், பெரியார் மீது கல்யாண சுந்தரத்திற்கு ஒருவித ஈடுபாடு.
காங்கிரசிலிருந்து பெரியார் விலகினதும் இவரும் விலகினார். கதர்க் கடை நடத்திய படியே பெரியார் நடத்திய குடியரசு, நவசக்தி, இந்தியா பத்திரிகைகளுக்கு ஏஜெண்ட் ஆகவும் இருந்தார் கல்யாணசுந்தரம்.
அவர் பேப்பர்களைப் பிரித்து வீடுவீடாகக் கொண்டுபோய் போடும்போது, மகன் ராமய்யாவும் அதற்கு உதவி செய்ததுண்டு. “மற்றவர்கள் மாதிரி இல்லாமல் அப்பா மட்டும் ஏன் இப்படி ஏதோ ஒரு வேகத்துடன் அலைகிறார்? ஏனிந்தக் கூட்டங்கள்? புத்தகங்கள்?” சிறுவனான ராமய்யாவுக்கு இந்தக் கேள்வி தோன்றிப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்து, அப்பாவுடன் கூட்டங்களுக்கும் போய் வந்ததில் மனதுக்குள் ‘அக்கினிக்குஞ்சு' புகுந்துவிட்டது.
பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் கதர்க்கடையை நடத்த முடியாமல், சிதம்பரத்திற்குக் குடும்பத்தோடு கிளம்பினார் கல்யாணசுந்தரம். மயிலாடுதுறையில் படித்துக் கொண்டிருந்தபோதே தமிழில் ஒரு பிடிப்புடன் இருந்த ராமய்யாவும் கிளம்பிப்போய், சிதம்பரத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியேறினார்கள்.
அங்கும் பல பத்திரிகைகளுக்கு ஏஜெண்ட் ஆகி, நீதிக்கட்சிக் கிளையையும் சிதம்பரத்தில் கல்யாணசுந்தரம் துவங்கினபோது, ராமய்யாவும் அதில் உறுப்பினராகச் சேர்ந்தார் அன்பழகன். அவருக்கு அப்போது வயது 17.
“சிதம்பரம் அவருடைய சுயமரியாதை இயக்க உயர்வு வளர நல்ல தளமானது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட் சேர்ந்து பி.ஏ.ஹானர்ஸ் படித்தபோது தமிழில், தமிழுணர்வில் பற்று அதிகமானபோது ராமய்யா ‘அன்பழகன்' ஆனார்.
அவருடன் படித்த நாராயணசாமி ‘நெடுஞ்செழியன்' ஆனார். தனித்தமிழ் ஆர்வத்தினால் இப்படிப் பெயரை மாற்றிக் கொண்டார்கள். மாயூரத்தில் இருந்தபோதே அண்ணாவின் பேச்சைக்கேட்டு அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டிருந்த அன்பழகனுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தில் பேச வாய்ப்பு வந்தபோது, மேடைக் கூச்சமில்லை. தயக்கமில்லாமல் வேகத்துடன் பேசினார். மாணவர்களிடம் அந்தப் பேச்சுக்குத் தனி மரியாதை.
படித்திருந்த புத்தகங்கள், மனசில் கனல் மாதிரி இருந்த சுயமரியாதை உணர்வு, தங்கு தடையில்லாத சொல்வளம், நேரடியான பளிச்சென்ற பேச்சு - இதன்மூலம் பலரும் கவனிக்கத்தக்க பேச்சாளர் ஆகிவிட்டார்.
அன்றிலிருந்து மனதில் பட்டதைத் துணிந்து சொல்லிவிடுகிற இயல்பு மாறவில்லை அவருக்கு…” என்கிறார் இளம் வயது முதல் பேராசிரியர் அன்பழகனுக்கு நெருக்கமானவரான புலவர் மா.செங்குட்டுவன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மேடையில் அன்பழகன் பேச ஆரம்பித்தபோது, எதிர் வரிசையில் உட்கார்ந்து கைதட்டினார் அதே பல்கலைக்கழக மாணவரான நெடுஞ்செழியன்.
பேச்சில் இருந்த விஷயம் பிடித்து விடுதலை, குடியரசு பத்திரிகைகளை வாங்குவதற்காக அன்பழகன் வீட்டுக்குப் போனார்கள் நெடுஞ்செழியனும் அவரது தம்பி செழியனும்.
நட்பு நெருக்கமாகி மேடைகளில் பேச, இரட்டையராகப் பல கூட்டங்களுக்குப் போனார்கள் அன்பழகனும் நெடுஞ்செழியனும்.
“பேராசிரியர் அவர்களின் சொற்பொழிவுகளைக் கூட்டத்தில் உட்கார்ந்து கைதட்டி வரவேற்றேனேயல்லாமல், மேடையேறி அவர் முன்மொழிந்ததை வழிமொழியும் ஆற்றலைப் பெறவில்லை.
அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மூன்றாவது ஆனர்ஸ் வகுப்பில் படிக்கும்போது துணிந்து மேடையேறிப் பேசத் தொடங்கினேன்” என்கிறார் நெடுஞ்செழியன் தனது இளமைப்பருவம் குறித்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்தச் சம்பவம் பல மாணவர்களுக்குத் தமிழுணர்வு விசிறிவிடக் காரணமாகிவிட்டது.
தமிழிசை இயக்க உணர்வு எழுந்த காலத்தில், பல்கலைக்கழகத்தில் பாட வந்தவர் தண்டபாணி தேசிகர். தமிழ்ப்பாடலைப் பாட முடியாமல் ஒரு பிரிவினரால் அவர் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
அப்போது அப்பிரிவினரை ஒருங்கிணைத்து தண்டபாணி தேசிகருக்கு ஆதரவானதாக மாற்றினார் அன்பழகன். அந்த உணர்வு பல மாணவர்களை ஒருங்கிணைத்தது.
அதே பல்கலைக்கழகத்தில் நடந்த தியாகய்யர் விழாவில் தெலுங்கில் பாடவந்த மதுரை மணி அய்யரைப் பாட விடாமல் செய்து திருப்பி அனுப்பினார்கள்.
எந்த விஷயமானாலும் படபடவென்று பேசி விடுகிற இயல்பு இருந்ததால், அன்பழகனுக்கு மாணவர்கள் மத்தியில் அப்போது இருந்த பெயர் ‘ஊசிப் பட்டாசு'.
தமிழ் இலக்கிய மன்றம் வைத்திருந்த அன்பழகன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணாவை அழைத்தபோதும் எதிர்ப்பு. அதையெல்லாம் மீறி வந்து பிரவாகம் மாதிரி அண்ணா உரையாற்றின தலைப்பு ‘ஆற்றோரம்'.
ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களான அன்பழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் திருவாரூரிலிருந்து பேச அழைப்பு.
ரயிலில் கிளம்பினார்கள். கூட்டத்தில் பேசிவிட்டுக் கிளம்புகிற நேரத்தில் கூட்டம் ஏற்பாடு செய்த சுறுசுறுப்பான அந்தத் திருவாரூர் இளைஞரைக் காணவில்லை.
வந்தவர்களின் பயணச் செலவுக்காக ஆறு ரூபாய் கூட கொடுக்க வழி இல்லாமல் தனது வீட்டில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்து ஐந்து ரூபாயுடன் வியர்க்க விறுவிறுக்க வந்த அந்த இளைஞர்- முத்தமிழறிஞர் கலைஞர் .
நடந்த விழா-முரசொலியின் முதலாம் ஆண்டு விழா. நடந்த ஆண்டு 1943.
“அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பார் பேராசிரியர். சத்தம்தான் பலமா இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் புலவர் படிப்பு படித்துக்கொண்டிருந்த நேரம்.
அப்போது நான் தீவிர ஆஸ்திகன். சுயமரியாதைக் கருத்துக்களை, எந்த விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் பேசுவார் அன்பழகன்.
பல பேரிடம் தொடர்ந்து பேசித் தனது வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பார். நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதியில் வந்து ஒரு நாள் இரவு பேசிவிட்டு அறையில் கிடந்த டீப்பாய்களை இணைத்து சாப்பிடாமலேயே அதில் படுத்துத் தூங்கினார்.
பொறி பறக்கிற மாதிரி இருக்கும் அவரது பேச்சு. அவரைவிட, அவருக்கு அவரது கொள்கைகள் முக்கியம். அவருடைய தகப்பனாருக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பலரை நன்றாகத் தெரியும்.
இருந்தும் அவர்கள் மூலம் தனது வசதியைப் பெருக்கிக் கொள்ள நினைக்காதவர் அன்பழகனின் தந்தை. அதே வழியில் இருப்பவர் அன்பழகன்… இவர் அமைச்சரான பிறகும்கூட சிதம்பரத்தில் பேப்பர் ஏஜெண்டாகத்தான் இருந்தார் இவருடைய தகப்பனார்” என்று பல சம்பவங்களைச் சொல்லிக்கொண்டு போனார் பேராசிரியர் நன்னன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடிந்ததும் பெரியார் கூப்பிட்டுக் கேட்டார்.
“என்னப்பா… என்ன செய்யப் போறே?”
“ஏதாவது ஆசிரியர் வேலையில் சேரணும்” என வீட்டு நிலைமையைச் சொன்னார் அன்பழகன். முத்தையா செட்டியாருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதி அன்பழகனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார் பெரியார்.
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறையில் வேலை கிடைத்தது. அதற்குள் திருமணம். பெண் பார்த்ததும் பெண்ணின் தகப்பனாரிடம் ”பெண்ணின் பெயரைத் தமிழில் மாற்றிக் கொள்ளலாமா?” என்று கேட்டார் அன்பழகன்.
சம்மதம் கிடைத்ததும் ஜெயலட்சுமி ‘வெற்றிச்செல்வி' ஆனார். சென்னைக்கு வந்து வெகுகாலம் வரை அன்பழகன் இருந்தது புரசைவாக்கம் வேளாளர் தெருவில் இருந்த மாமனாரின் வீட்டில்தான்.
பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன் என்று பல தமிழறிஞர்கள் உடன் பணியாற்றினார்கள்.
அன்பழகனின் பேச்சில் இருந்த வசீகரம் மாணவர்களுக்குப் பிடிக்க, இடையிடையே பாடத்தோடு திராவிடப் பிரச்சாரம் நடந்தது. “சேரன் சிற்றரசர்களை ஆண்டான், டில்லி நம்மை ஆள்வது போல” என்கிற மாதிரியான பாடங்கள்.
சென்னை வந்ததுமே முட்டை ஓட்டை விட்டு கோழிக்குஞ்சு வெளிவருகிற சின்னத்துடன் ஒரு பத்திரிகை நடத்தினார் அன்பழகன்.
பெயர் ‘புதுவாழ்வு’
ஒன்றரை ஆண்டுகளில் அது நின்றுபோனது. அந்தப் பத்திரிகையில் நாவல் கூட எழுதி இருக்கிறார் அவர்.
“நான் எப்போதும் அன்பழகனை ராமய்யான்னுதான் தான் கூப்பிடுவேன். எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், நட்புக்குப் பிரச்சினை இல்லை.
ஆசிரியராக இருந்தபோது வகுப்பை அற்புதமாக நடத்துவார். அலட்சியமாக இல்லாமல் பொறுப்புணர்ச்சியுடன் பாடங்களை விளக்குவார். எவ்வளவோ கட்சி வேலைகள் இருந்தாலும், வகுப்புகளுக்குச் சரியாக ஆஜராகிவிடுவார்.
அண்ணா மாதிரி இவரிடமும் ஒரு எளிமை. தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். பிறகு அரசியலுக்கு முழுநேரமாக வந்துவிட்டாலும் எந்தக் கூட்டத்திலும், எடுத்த கருத்திலிருந்து விலகாமல், அதன் உயிர்நாடியை உணர்த்துகிற மாதிரி பேசுவதுதான் அவரது தனித்தன்மை.”
சமீபத்தில் வயோதிகத்தின் காரணமாகப் பார்வை குறைந்துவிட்ட நிலையிலும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் அ.ச.ஞானசம்பந்தன்.
“ஏம்ப்பா… எழும்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக நிக்கணும்னு நினைக்கிறேன்… வேலைய விட்டுட்டு… முழுசா அரசியலுக்கே வந்துடுப்பா” அண்ணாவின் வேண்டுகோளிலிருந்த அன்பைத் தட்ட முடியவில்லை அன்பழகனால்.
12 ஆண்டுகாலப் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு வந்தாலும் ‘பேராசிரியர்' அடைமொழி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது. 57-ல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது உடன் மனைவியும் பிரச்சாரத்திற்கு வந்தார்.
அலங்காரங்கள் இல்லாமல் எளிமையான பிரச்சாரம்.
“ஒழுங்காகவும் நேர்மையாகவும் சட்டமன்றத்தில் பணியாற்றுவேன் என்று பொதுமக்களாகிய நீங்கள் நம்பினால் எனக்கு வாக்களியுங்கள்”
மக்கள் நம்பினார்கள். வாக்களித்தார்கள்.
தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார். தி.மு.க.வுக்காகத் தொழிற்சங்கம் இல்லாதிருந்த நேரம் அது.
“கம்யூனிஸ்டுகள் மாதிரியே நாமும் தொழிற்சங்கம் அமைக்கணும்” என்று அண்ணாவிடம் சொல்லித் தொழிற்சங்கங்கள் மாவட்ட வாரியாகத் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தார் அதன் செயலாளர் அன்பழகன்.
அதோடு சட்டமன்றத் துணைத் தலைவர். 62-ல் சட்டமன்ற மேலவை உறுப்பினர். 67-ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.
தி.மு.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருந்த நேரம். “யார் அமைச்சர்?” என்று பலருக்குக் கேள்விகள். அண்ணாவைப் பலரும் தேடிக்கொண்டிருந்தபோது, சென்னை ஆஸ்பிரன் தோட்டத்திலிருந்த அன்பழகன் வீட்டில் இருந்தபடி நிதானமாக அமைச்சர்கள் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தார் அண்ணா.
நாடாளுமன்ற தி.மு.க குழுத்தலைவரான அன்பழகன். 71-ல் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனாலும், கலைஞர் அன்பழகனைக் கூப்பிட்டு “என்ன இலாகா வேணும்” என்று கேட்டபோது” மற்றவர்களுக்கெல்லாம் இலாகாக்களை ஒதுக்கிட்டு மிச்சம் எந்த இலாகா இருக்கோ அதைக் கொடுங்க போதும்…” என்று பதில் சொல்ல அன்பழகனுக்குக் கிடைத்தது சுகாதார இலாகா!
“பச்சையப்பன் கல்லூரியில் படிக்க நான் சென்னைக்கு வந்தபோது கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தவர் பேராசிரியர்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் தான்கொண்ட கொள்கையிலிருந்து வழுவாமல் தனக்குச் சரியென்றுபட்டதை எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், சொல்லக்கூடியவர் அவர். அண்ணாவிடம் உரிமையுடன் பேசக்கூடியவர்.
தி.மு.க.வுக்கு பாதிப்பு வருகிற மாதிரியான நேரத்தில் எல்லாம் பக்கபலமாக கலைஞருடன் நின்றவர். கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள ஆழமான நட்பை வெட்ட யாராலும் முடியாது” என்கிறார் வருவாய்த்துறை அமைச்சரான நாஞ்சில் மனோகரன்.
‘தி.மு.க. கொடியில் சிவப்பும் கருப்பும் இணைந்த மாதிரி’ என்று தன்னையும் அன்பழகனையும் பற்றிச் சொல்கிறார் கருணாநிதி.
44-ல் ஆரம்பித்து திராவிட இயக்க, தி.மு.க மாநாடுகளில் உரையாற்றி வருகிற அன்பழகனின் பேச்சில் இருக்கிற பொதுவான சரக்கு - தமிழ் உணர்வு, தமிழ்ச் சமூகம்.
“பேராசிரியர் அன்பழகனிடம் அரசியலை விட சமூகநீதிக் கண்ணோட்டம் அதிகம். அரசியல்வாதிக்கே உரிய சில இயல்புகள், கோஷ்டிகள் எதுவும் இல்லாதவர் அவர்.
சமூகச் சீர்திருத்த அடிப்படையில் அமைந்தது அவரது வாழ்க்கை. அவரிடம் இருப்பது தார்மீகமான, நியாயமான கோபம். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை வேரான கொள்கைகளை எந்த இடத்தில், எந்தப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசுகிறவர் அவர்தான்.
விளம்பரத்திற்காக எதையும் செய்யாத இயல்பு அவருக்கு. பழைய சுயமரியாதைக்காரர்களின் வரலாற்றை இன்றைக்கும் தெளிவாகச் சொல்கிற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தலைவர்களின் வரிசையில் இருப்பவர் பேராசிரியர்” - நட்புடன் பேசினார் மூத்த பத்திரிக்கையாளரான சின்னக்குத்தூசி தியாகராஜன்.
முதல் மனைவி வெற்றிச்செல்வி இறந்தபிறகு, அன்பழகனின் இரண்டாவது மனைவி சாந்தகுமாரி. அன்பழகனின் இரு மகள்களும் மருத்துவர்கள். மகன் பொறியாளர்.
‘மற்றவர்களுடன் பேசுவதும் படிப்பதும்தான் பொழுதுபோக்கு' என்று சொல்கிற அன்பழகன் தனது உடை, வெளித்தோற்றம் இவை குறித்து என்றும் கவலைப்படாதவர்.
வெற்றிலை பாக்கு சகிதமாகக் காட்சியளிக்க ஆரம்பித்ததைப் பற்றி- “யாராவது ஏதாவது கேட்கும்போது சட்டென்று கோபமாகப் பேசி விடுவேன். அதைத் தவிர்க்கத்தான் இந்த வெற்றிலை பாக்கு” என்கிறார்.
தெளிவான நீரோட்டம் மாதிரியான சொற்பெருக்குடன் தன்னைப் பற்றிச் சொல்வது நெகிழ்வூட்டுகிறது.
“முதலில் நான் மனிதன். அதன் பிறகு அன்பழகன். மூன்றாவது பகுத்தறிவுவாதி. நான்காவது அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் நண்பர். இந்த வரிசை எப்போதும் என்னிடம் இருக்கிறது. சாவினால் மட்டுமே இந்த வரிசையைக் கலைக்க முடியும்.”
- 1997-ல் வெளியான ‘மணா’வின் ‘நதிமூலம்’ என்ற நூலில் வெளியான கட்டுரை.
நன்றி : மூத்த பத்திரிகையாளர் மணா