ஊரடங்கை தக்க சமயமாக பயன்படுத்தி மத்திய மோடி அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களின் கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது #scrapEIA2020, #WithdrawEIA2020 போன்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.
இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பேசியுள்ள போது, இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ பெருமளவில் வைரலாகியதோடு ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு வித்திட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க ஆதரவாளரான கல்யாண் என்கிற கல்யாணராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் “EIA பற்றி பேசிய அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் விலாசம் மொபைல் நம்பர் ஆகியவை தேவை யாரிடமாவது இருந்தால் என்னுடைய இன்பாக்ஸில் பகிரலாம்” எனக் குறிப்பிட்டு நேற்று இரவு பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் “EIA பற்றி ஒரு பெண்ணை பேச வைத்து நாடகம் ஆடுகிறது தி.மு.க.” என பொய்களையும் அவிழ்த்துவிட்ட கல்யாணராமன், “நல்ல மேக்கப், பேக்ரவுண்ட் மியூசிக், பின்னாடி நாலு பிளைவுட் வச்சு எதோ வீட்டில் இருந்து பேசினா மாதிரி ஜோடனை, முன்னபின்ன தெரியாத சப்ஜெக்ட்டை பேசினாலும் தெளிவா பேசுவது போல பிரமை, கடைசியா வாழ்க பாரதம் வாழ்க இந்தியா என்று தேசாபிமானி வேடம்.” என ஏளனமாகவும் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கல்யாணராமன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில், பா.ஜ.க-வில் கல்யாணராமன் எவ்வித பொறுப்பிலும் இல்லை என்றும் அவரது கருத்து பா.ஜ.க-வின் கருத்தாகாது என்றும் பா.ஜ.க தலைமை அறிவித்திருந்தது. ஆனால், தொடர்ச்சியாக பா.ஜ.க ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வரும் கல்யாணராமன் தனது ட்விட்டர் ஹேண்டில் பெயரிலும் BJP என்றே குறிப்பிட்டுள்ளார்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக சுற்றுச்சூழலை கெடுத்து அரசே மக்களின் வயிற்றில் அடிப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து பொது வெளியில் எடுத்துரைத்தால் இது போன்ற கயவர்களினால் அவர்கள் அடியோடு மறைக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தையும், கண்டனத்தையும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி விவகாரத்தின் போது ஊடகவியலாளர் ஹசீஃப் கட்டாய ராஜினாமா செய்ததை தபோல்கர், கெளரி லங்கேஷ் போன்றவர்கள் ஏனோ நினைவுக்கு வருகிறார்கள் என ட்விட்டரில் பதிவிட்டதும் இதே கல்யாண்தான்.
இவ்வாறு தன்னுடைய அதிகார பலத்தை வைத்து யாராக இருந்தாலும் அவர்களை இழிவாக பேசியும் மிரட்டியும் அழிக்கவோ மறைக்கவோ முடியும் என்பதை தொடர்ந்து பா.ஜ.க ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.