கும்பகோணம் நகராட்சி பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள பாதாளச் சாக்கடைகள் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, தனியார் துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு அடைப்பைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்ய ராஜா, வீரமணி, மேலக்காவிரி, சாதிக் பாட்சா ஆகிய நான்கு பேரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது, கழிவுநீர்க் குழாயில் அடைப்பை சீர்செய்ய முயன்ற போது, அதற்கான டியூப் குழாயின் உள்ளே செல்லாததால், சாதிக்பாட்சா குனிந்து ஆளிறங்கும் குழாயைப் பார்த்தார். அப்போது விஷவாயு தாக்கியதில் நிலைதடுமாறி அந்தக் குழிக்குள் விழுந்தார்.
இதனால் பதறிப்போன சக தொழிலாளர்கள் சாதிக் பாட்சாவை தூக்க முயற்சித்துள்ளனர். ஆனால் விஷவாயு வெளிப்பட்டதால் அவர்களால் உடனே தூக்கமுடியாமல் போனது. அதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள் நகராட்சி அதிகாரிகளை போனில் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் உதவிக்கு வராமல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இரண்டு மணி நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நீண்டநேர போராட்டத்திற்குப் பிறகு சாதிக் பாட்சாவை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கும்பகோணத்தின் பல பகுதிகளில் இதுபோல சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் பலவகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
முன்னதாக நகராட்சி சார்பாக சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு ரோபோவையும் வைத்து இவர்கள் சுத்தம் செய்யவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவிக்குக் கூட அதிகாரிகள் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.