அ.தி.மு.க ஆட்சியில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ரூபாய் 20.50 ஆக இருந்த பால் விலையை 27 ரூபாயாக உயர்த்தினார். 3 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா சிறைக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு வந்தபிறகு மேலும் பால் விலையை உயர்த்தி 37 ரூபாய்க்கு கொண்டுவந்தார்.
தற்போது, எடப்பாடி பழனிசாமி மீண்டும் பால் விலையை உயர்த்தியிருக்கிறார். விவசாயிகளுக்கு நன்மை செய்யும் விதமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்றாமல் விற்பனை விலையை அதிகரித்து நடுத்தர, ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ளது அ.தி.மு.க அரசு.
‘ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்கவில்லை; கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நட்டத்தில் இயங்குகின்றன” என விலையேற்றத்துக்கு நொண்டிச் சாக்கு சொல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. துறையை நிர்வகிக்க இயலாமல், உலக விஷயங்கள் குறித்தெல்லாம் உளறிக்கொட்டும் ராஜேந்திர பாலாஜியை அமைச்சராக்கியதன் விளைவு தான் நட்டத்திற்கும், விலையேற்றத்துக்கும் காரணம்.
ஆவின் பாலில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டது; பால் முறைகேட்டில் உயரதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நீதிபதியே தெரிவித்தார். ஆவின் பால் முறைகேட்டில் சிக்கி அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டது; பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது; பால் கொள்முதலில் முறைகேடு - பாலித்தீன் கவர் கொள்முதலில் ஊழல் என எல்லாவற்றிலும் முறைகேடுகளால் நிரம்பி வழிகிறது பால்வளத்துறை.
முறைகேடு புகார்கள் எதற்கும் பதில் சொல்லாமல், “நட்டத்தில் இயங்குவதால் விலையைக் கூட்டினோம்” என சப்பைக்கட்டு கட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அத்துறையின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, பால் வளத்துறை லாபத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கிறார். இருவரில் யார் சொல்வது உண்மை எனத் தெரியவில்லை.
நிர்வாகம் செய்யத் தெரியாமல் நஷ்டக் கணக்கு காட்டி பால்வளத்துறையை மட்டுமல்ல; இஷ்டத்திற்கு விலையை ஏற்றி நடுத்தர ஏழை மக்களைப் பாடாய்ப்படுத்தி, தமிழகத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.