மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான நடராஜன் இடம்மாற்றம் செய்ய வேண்டும், உதவி தேர்தல் அதிகாரி மற்றும் காவல் உதவி ஆணையரையும் இடம் மாற்றம் செய்ய வேண்டும் , அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும் உதவி காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு - விசாரணை வரும் 30-க்கு ஒத்திவைப்பு