17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இன்று ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்த நிலையில் , இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், ஒருவரை தவிர அனைவரும் குணமடைந்ததால் திட்டமிட்டபடி போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். 13.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக ஆடியது.
கிராவ்லி 86 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், டக்கட் 105 பந்துகளில் சதமடித்தார். இந்த ஜோடி 35 ஓவர்களில் 233 ரன்கள் குவித்த நிலையில், கிராவ்லி 122 ரன்களிலும், டக்கட் 107 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த போப்பும் அதிரடியை தொடர்ந்த நிலையில், இடையில் ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து போப்புடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்த ஹாரி புரூக் 80 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதிலும் ஷகீல் வீசிய 68-வது ஓவரில் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து அதகளப்படுத்தினார். போப் 90 பந்துகளில் சதமடித்த நிலையில், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னரும் இங்கிலாந்து அணி அதிரடியைத் தொடர்ந்த நிலையில் 75 ஓவர்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்த நிலையில், புரூக் 101, ஸ்டோக்ஸ் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் ஒரே நாளில் 500 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. அதேபோல ஒரே நாளில் ஒரு அணியின் 4 வீரர்களும் சதமடித்ததும் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை வழக்கம் போல 90 ஓவர்களும் வீசப்பட்டிருந்தால் இங்கிலாந்து அணி 600 ரன்களை கூட கடந்திருக்கும்.