இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் வினோத் காம்பிளி. இவரும் சச்சின் டெண்டுல்கரும் ஒன்றாகவே பள்ளி காலத்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கினர். அந்த காலத்தில் இருவர் சேர்ந்து அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையையும் படைத்தனர்.
சச்சினை தொடர்ந்து வினோத் காம்பிளி இந்திய அணிக்காக களமிறங்கியபோது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் ஜொலித்தவர் பின்னர் தடுமாறத்தொடங்கினார். அதோடு அவருக்கு அதிர்ஸ்டமும் இருக்கவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த வினோத் காம்பிளி சில அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். ஆனால் அங்கும் போதிய வாய்ப்பின்றி தடுமாறினார். இதில் கொரோனா ஊரடங்கு அவரை கடுமையாகப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
அதைத் தொடர்ந்து தனியார் ஊடகம் ஒன்றில் தனது நிலை குறித்து அவர் பேசியுள்ளார். அதில், ஓய்வுக்கு பிறகு பிசிசிஐ பென்சனை மட்டுமே நம்பி இருக்கிறேன், எனக்கு வருமானம் கொடுக்கும் பிசிசிஐ-க்கு நான் நன்றி கடன் பட்டுளேன். அந்த வருமானம்தான் எனது குடும்பத்தை காத்து வருகிறது.
என்னுடைய பொருளாதார நிலை சச்சினுக்கு தெரியும். ஆனாலும் அவரிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. மிடில் செக்ஸ் குளோபல் அகெடமியில் பணியை எனக்கு பெற்றுத்தந்தவர் சச்சின்தான். அவர் எப்போதும் எனக்கு நல்ல நண்பனாக இருக்கிறார். எனது வருமானத்துக்கு மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு தனக்கு ஏதாவது பணி வாய்ப்புகள் வழங்கவேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது வினோத் காம்பிளிக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்க தொழிலதிபர் சந்தீப் தோரட் என்பவர் முன்வந்துள்ளார். ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி மும்பையில் உள்ள சாயாத்ரி இண்டஸ்ட்ரி குழுமம் வினோத் காம்பிளிக்கு வேலை அளித்துள்ளது. இது கிரிக்கெட் தொடர்பான வேலை அல்ல என்றும் அந்த நிறுவனத்தின் நிதிப்பிரிவில் ஒரு உயர்பதவி வேலை என்று கூறப்படுகிறது.
இந்த வேலை வாய்ப்புக்கு வினோத் காம்பிளி தரப்பில் பதில் ஏதும் கூறப்படாத நிலையில், இந்த வேலையை ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்பது குறித்த விவாதம் ஊடகங்களில் எழுந்துள்ளது. தொழிலதிபரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.