44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28ம் தேதி மஹாமலிபுரத்தில் தொடங்கியது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.
52 வயதான ஆனந்த் இந்த ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பல உலகத்தர வீரர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்காததன் காரணம் குறித்துப் பேசியிருக்கும் ஆனந்த், "இல்லை. நான் இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்து யோசிக்கவே இல்லை. இந்தத் தொடர் எங்கு நடந்திருந்தாலும் நான் நிச்சயம் விளையாடி இருக்கமாட்டேன். சமீப காலமாக செஸ் தொடர்களில் பங்கேற்பதைக் குறைத்திருக்கிறேன். உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச் சுற்றுக்குள் நுழைய நான் முயற்சி செய்யவில்லை. சொல்லப்போனால் இந்த முடிவை மாற்றுவது பற்றி நான் யோசிக்கவே இல்லை" என்று கூறியிருக்கிறார்.
இது தான் ஒதுங்கிவிட்டு இளைஞர்களுக்கு வழிவிடும் நேரம் என்று கூறியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். "இந்திய அணியில் இப்போது பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாம் ஏன் மீண்டும் மீண்டும் பங்கேற்க வேண்டும். அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அவர்கள் என்னிடம் ஏதும் ஆலோசிக்கவேண்டும் என்று நினைத்தால் நான் அவர்களுக்காக இங்கே தான் இருக்கப் போகிறேன். சொல்லப்போனால் அந்த அணியில் பலரிடமும் நான் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கிறேன். நான் நிச்சயம் கலகலப்பான ஆலோசகராக இருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு முன் ஒரு சில இளம் வீரர்களுக்கு தான் என்ன மாதிரியான அறிவுரைகள் கூறியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஆனந்த். "என்னுடைய மிக முக்கியமான வேலை, நெருக்கடியை உணர வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவது தான் என்று நினைக்கிறேன். இந்தியாவில் விளையாடுவது ஒரு மிகச் சிறந்த அனுபவம். நெருக்கடியை உணர்வது எந்த வகையிலும் நமக்கு உதவப் போவதில்லை" என்றும் கூறியிருக்கிறார் ஆனந்த்.
தன் சொந்த நாடான இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். "ஆரம்பத்தில் செஸ் ஒலிம்பியாட் இங்கு நடப்பதாக இல்லை. ஆனால், இப்போது நம் ஊரில் அது நடக்கப்போகிறது. இது மிகப் பெரிய விஷயம்.
இங்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒரு மிகப் பெரிய நிகழ்வு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ, அப்படி ஒரு தாக்கத்தை இந்தத் தொடர் நெடுங்காலத்துக்கு ஏற்படுத்தப்போகிறது" என்றும் கூறியிருக்கிறார் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்.
ஒரு வரலாற்று நிகழ்வாக நடந்துகொண்டிருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓப்பன் பிரிவில் 188 அணிகள் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்கின்றன.