உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
இது தவிர ஐபிஎல் தொடர் ஐ.சி.சியின் "Future tour programme" பட்டியலில் இடம்பெற்றுவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் ஐ.பி.எல் அணிகள் தென்னாபிரிக்கா, அரபு நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களிலும் முதலீடு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வருடத்திற்கு இரண்டு ஐ.பி.எல் தொடர் நடத்துவது சம்பந்தமாகவும் பேசப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ எந்த கருத்தும் கூறாத நிலையில், அது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், 'வருடத்திற்கு இரண்டு ஐ.பி.எல் தொடர் நடத்துவதற்கான திட்டத்தை பிசிசிஐ வைத்திருந்தால் அதை நினைத்து நான் ஆச்சரியப்படவில்லை, குறைவான கிரிக்கெட் போட்டி இருக்கும்பொழுது வருடத்தில் இரண்டாவது பாதியில் ஷாட்டர் ஃபார்மட்டில் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம், அதை உலகக் கோப்பை தொடர் போன்று நாக் அவுட் முறையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.
தற்போது பத்து அணிகளாக இருக்கும் இந்த ஐ.பி.எல் தொடர் எதிர்காலத்தில் 12 அணிகளாக மாறலாம், இதனால் அதற்கு ஏற்றார் போல் இன்னும் 1½முதல் 2 மாதங்கள் அட்டவணையை அதிகப்படுத்தலாம்" எனக் கூறியுள்ளார்.